சேலம் சூரமங்கலத்தில் பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு
சேலம் சூரமங்கலத்தில் பூட்டிய வீட்டில் நகை, பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
சூரமங்கலம்,
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சேலம் சூரமங்கலம் முல்லைநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 56). இவரது குடும்பத்தினர் வெளியூர் சென்றுவிட்டு சம்பவத்தன்று ரெயிலில் சேலம் திரும்பினர்.
இதற்காக அன்றையதினம் நள்ளிரவில் வீட்டை பூட்டிவிட்டு அவர்களை அழைத்து வருவதற்கு ராஜா, ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு புறப்பட்டு சென்றார். பின்னர் அவர்களை அழைத்து வந்து முல்லைநகர் ராஜாஜி தெருவில் வசித்து வரும் தனது சகோதரர் பாஸ்கர் வீட்டில் விட்டுவிட்டு ராஜா மட்டும் பக்கத்து தெருவில் உள்ள வீட்டிற்கு திரும்பி வந்தார்.
அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்றுபார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 2 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு ராஜா சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், அதன்பிறகு உள்ளே புகுந்து நகை, பணத்தை திருடி சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.