வானவில் : வந்துவிட்டது ரூ. 10.49 லட்சம் விலையில் கவாஸகி நின்ஜா
பிரீமியம் மோட்டார் சைக்கிள்கள் உற்பத்தியில் கவனம் செலுத்தும் கவாஸகி நிறுவனம் தனது நின்ஜா இஸட்எக்ஸ்.6.ஆர். மாடலுக்கான முன்பதிவை கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கியது.
இந்தியாவுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த மாடல் விற்பனை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ள கவாஸகி ஆலையில்இருந்து தயாரிக்கப்பட்டு உதிரி பாகங்களாக இங்கு இறக்குமதி செய்யப்பட்டு அசெம்பிளி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அறிமுக சலுகையாக இதன் விலை ரூ.10.49 லட்சம் என நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் இந்த சலுகை குறிப்பிட்ட காலம் வரையில்தான் இருக்கும். அதன் பிறகு இதன் விலை உயரும் என்று கூறப்படுகிறது.
நின்ஜா இஸட் எக்ஸ்.6.ஆர். மாடலானது முழுவதும் எலெக்ட்ரானிக்ஸ் செயல்பாடுகளைக் கொண்டது. இதன் முன் பகுதி கூரிய முனை போல வடிவமைக்கப்பட்டுள்ளது. முழுமையான எல்.இ.டி. முகப்பு விளக்கு கம்பீரமான தோற்றத்தை அளிக்கிறது.
இது 636 சி.சி. திறன் கொண்டது. நான்கு சிலிண்டர் என்ஜின் உள்ளது. இது 130 ஹெச்.பி. திறனை 70.8 நியூட்டன் மீட்டர் இழுவிசையைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்லிப்பர் கிளட்சுடன் 6 கியர்களைக் கொண்டதாக இது வந்துள்ளது. டிராக்ஷன் கண்ட்ரோல் வசதி, ஏ.பி.எஸ், கவாஸகி க்விக் ஷிப்டர் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்த மோட்டார் சைக்கிளின் எடை 196 கிலோவாகும். இதன் உயரம் 830 மி.மீ. ஒற்றை இருக்கையுடன் இது வந்துள்ளது.
இந்த பிரிவில் நின்ஜாவுக்கு கடும் போட்டியாக இருக்கக் கூடியது டிரையம்ப் ஸ்டிரீட் ஆர்.எஸ். மட்டுமே. விலை மற்றும் செயல்பாடுகளில் ஓரளவு பொருந்தி வரக்கூடியதும் இந்த மோட்டார் சைக்கிள் மட்டுமே. இதேபோல டுகாடி 959 பனிகேல் மோட்டார் சைக்கிளும் ஓரளவு போட்டியாக இருக்கக் கூடும்.
வாடிக்கையாளர்கள் ரூ. 1.5 லட்சம் கொடுத்து முன்பதிவு செய்யலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. முன் பதிவு செய்தவர்களுக்கு பிப்ரவரி மாதத்திலிருந்து இந்த மோட்டார் சைக்கிள் டெலிவரி செய்யப்படும். புதிதாக முன்பதிவு செய்பவர்கள் டெலிவரி குறித்த விவரங்களை அருகிலுள்ள கவாஸகி விற்பனையகத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.