மணல் குவாரி அமைக்க கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் நூதன போராட்டம்
விருத்தாசலத்தில் மணல் குவாரி அமைக்க கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் பகுதியில் உள்ள மணிமுக்தாறு மற்றும் வெள்ளாற்றில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசு மாட்டு வண்டி மணல் குவாரிகள் இயங்கி வந்தன. இந்த குவாரிகளை தற்போது அரசு மூடிவிட்டதால், தங்களது வாழ்வாதாரத்தை இழந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள், மீண்டும் மணல் குவாரியை திறக்க கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று காலை மாட்டு வண்டி தொழிலாளர்கள் விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் வாயில் துணியை கட்டிக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தொழிலாளர்கள், வி.குமாரமங்கலம் துணை மின் நிலையம் அருகில் மணல் குவாரி அமைக்க கோரி கோஷம் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து அனைத்து கிராம மாட்டு வண்டி தொழிலாளர்கள் சார்பில் அதன் சிறப்பு தலைவர் வெற்றிவேல், சப்-கலெக்டர் பிரசாந்தை சந்தித்து கோரிக் கை மனு ஒன்றை கொடுத்தார். மனுவை பெற்றுக்கொண்ட சப்-கலெக்டர் பிரசாந்த், இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன் பேரில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.