அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் 15 பள்ளிகள் மூடல்; அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின. 15 அரசு பள்ளிகள் மூடப்பட்டன.

Update: 2019-01-22 21:49 GMT
தூத்துக்குடி, 

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு(ஜாக்டோ-ஜியோ) சார்பில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்,. 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். 3 ஆயிரத்து 500 தொடக்கப்பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைப்பதால் தொடக்க கல்வியை முடக்க கூடாது, 3 ஆயிரத்து 500 சத்துணவு மையங்களை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும். எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த்தக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினர்.

இதையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய்த்துறையினர் நேற்றுமுதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் தாலுகா அலுவலகங்கள், உதவி கலெக்டர் மற்றும் கலெக்டர் அலுவலகங்களில் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை. இதனால் மக்களுக்கு பல்வேறு சான்றிதழ் வழங்கும் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. பெரும்பாலான அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதே போன்று வணிகவரித்துறை உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டன.

இதே போன்று தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பெரும்பாலானவர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்று உள்ளனர். அரசு தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றும் 1880 ஆசிரியர்களில் 1190 பேரும், அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றும் 3 ஆயிரத்து 47 ஆசிரியர்களில் 201 பேரும், அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் 2 ஆயிரத்து 428 ஆசிரியர்களில் 817 பேரும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் 2 ஆயிரத்து 740 ஆசிரியர்களில் 100 பேரும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்று உள்ளனர். அதே போன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 15 பள்ளிக்கூடங்கள் ஆசிரியர்கள் வராததால் மூடப்பட்டு இருந்தன. இதனால் பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி தூத்துக்குடி தாலுகா அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணி கணேசன், தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பழனிசாமி, அரசு பணியாளர் சங்கம் ரூஸ்வெல்ட், தமிழக தமிழாசிரியர் கழகம் ஆதிஅருமைநாயகம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்க மாவட்ட தலைவர் பவுல் ஆபிரகாம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் செல்வின், தமிழ்நாடு நில அளவையர் சங்க மாவட்ட தலைவர் அண்ணாமலை பரமசிவன், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக பிரான்சிஸ்ஹென்றி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போன்று ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, விளாத்திகுளம், சாத்தான்குளம் தாலுகா அலுவலகம் முன்பும், திருச்செந்தூர் யூனியன் அலுவலகம் முன்பும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப்பணியாளர் சங்கம் சார்பில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு நேற்று மதியம் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் மயில்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் ஆறுமுகநயினார், பொருளாளர் சேர்மத்துரை, துணைத்தலைவர் முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் திரளான ஊழியர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்