திண்டுக்கல்-திருச்சி மாவட்ட எல்லைப்பகுதி மக்களிடையே மோதல்- ஆட்டை கொன்று நடுரோட்டில் தொங்கவிட்டதால் பரபரப்பு
திண்டுக்கல்-திருச்சி மாவட்ட எல்லைப்பகுதி மக்களிடையே மோதல் எதிரொலியாக மர்ம நபர்கள் ஆட்டை கொன்று நடுரோட்டில் தொங்கவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வடமதுரை,
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே சுக்காவழி கிராமம் உள்ளது. இந்த கிராமம் திண்டுக்கல் மற்றும் திருச்சி மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது. கிராமத்தின் ஒரு பகுதி திண்டுக்கல் மாவட்டத்திலும், மற்றொரு பகுதி திருச்சி மாவட்டத்திலும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இரு பகுதிகளில் வசிப்பவர் களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதும், அவர் களை இரு பகுதிகளை சேர்ந்த பெரியவர்கள் சமாதானப்படுத்துவதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பகுதியில் வசிக்கும் விவசாயி ஒருவரின் ஆட்டை மர்ம நபர்கள் கொன்றனர். பின்னர் ஊர் எல்லையில் நடுரோட்டில் ஆட்டின் உடலை தலைகீழாக தொங்கவிட்டு சென்றுவிட்டனர்.
மறுநாள் காலையில் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் ஆடு, தலைகீழாக தொங்கவிடப்பட்டுள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே திருச்சி மாவட்ட பகுதியை சேர்ந்தவர்கள் அந்த ஆட்டை கொன்று தொங்க விட்டிருக்கலாம் என நினைத்து அவர் களிடம் கேட்டனர். ஆனால் அவர்கள் தங்களுக்கு அதுகுறித்து எதுவும் தெரியாது என கூறிவிட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. பின்னர் இரு கிராமத்தையும் சேர்ந்த ஊர் பெரியவர்கள் அவர்களை சமாதானம் செய்தனர்.
பின்னர் இதுகுறித்து ஊர் பெரியவர்கள் கூறுகையில், இரு மாவட்ட பகுதிகளை சேர்ந்தவர்களையும் மோதவிட்டு அதன் மூலம் பலன் அடைய மர்ம நபர்கள் சிலர் திட்டம் போட்டு ஆட்டை கொன்று ஊர் எல்லைப்பகுதியில் தொங்கவிட்டுள்ளனர். அவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். ஆட்டை கொன்று ஊர் எல்லையில் தொங்கவிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.