கோவை ரத்தினபுரியில் முதியவரிடம் பணம் பறிக்க முயன்ற 2 வாலிபர்கள் கைது
முதியவரிடம் பணம் பறிக்க முயன்ற 2 வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
கணபதி,
கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் அருள்பிரகாசம் (வயது 60). இவர் அந்த பகுதியில் மளிகை கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு கடையை மூடி விட்டு ரூ.15 ஆயிரத்துடன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அவரது பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள், அருள்பிரகாசத்திடம் இருந்த பணப்பையை பறிக்க முயன்றனர். ஆனால் அவர் பையை விடாமல் இறுக் கிப் பிடித்துக் கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் 2 பேரும் சேர்ந்து அருள்பிரகாசத்தை கீழே தள்ளினர். இதில் அவர் காயம் அடைந்தார். உடனே அவர்கள் பணத்தை பறித்துக் கொண்டு மோட்டார் சைக் கிளில் தப்பி செல்ல முயன்றனர். அப்போது நிலைதடுமாறியதால் மோட்டார் சைக்கிளில் இருந்து அவர்கள் 2 பேரும் கீழே விழுந்தனர்.
இதற்கிடையில் அருள்பிரகாசத்தின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அந்த 2 வாலி பர்களையும் மடக்கிப் பிடித்து சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்களை ரத்தினபுரி போலீசில் ஒப்ப டைத்தனர். உடனே போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
விசாரணையில், அவர்கள் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை சேர்ந்த மணிவண்ணன்(25), விஜயகுமார்(24) என்பது தெரிய வந்தது. மணிவண்ணன் கோவையில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாகவும், விஜய குமார் பெயிண்டராகவும் வேலை செய்து வந்தனர். மணிவண்ணன் மீது ஏற்கனவே ஒரு திருட்டு வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
கைதான 2 பேரும் கோவையில் வேறு யாரிடமும் கைவரிசை காட்டினார்களா? என போலீசார் விசாரித்துவருகின்றனர்.