தடைசெய்யப்பட்ட வலைகளில் மீன்பிடிப்பதை தடுக்கக்கோரி மண்டபத்தில் மீனவர்கள் முற்றுகை
அரசால் தடை செய்யப்பட்ட வலைகளில் மீன்பிடிப்பதை தடுக்கக்கோரி மண்டபத்தில் மீனவர்கள் முற்றுகையிட்டனர்.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் பிரதான தொழிலாக விளங்கி வருகிறது. விசைப்படகு,நாட்டுப்படகு,கட்டுமரம்,சிறியபடகு என பல முறைகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.மேலும் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல ஊர்களிலும் அரசால் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி ஒரு சில மீனவர்கள் மீன்பிடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் படகுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும், தடை செய்யப்பட்ட வலைகள் மீன் பிடிப்புக்கு துணைபோகும் மீன்துறை அதிகாரிகளை கண்டித்தும், உடனடியாக தடை செய்யப்பட்ட வலைகள் மீன்
பிடிப்பை முழுமையாக தடுத்து நிறுத்தக்கோரியும் மண்டபத்தில் நேற்று அனைத்து விசைப்படகு மீனவர்கள் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
ராமேசுவரம் விசைப்படகு மீனவர் சங்கபிரதிநிதி என்.ஜே.போஸ் தலைமையில் நடந்த போராட்டத்தில் மண்டபம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகள், பாலசுப்பிரமணியன், ஜாகிர்உசேன், கணபதி, விஜயரூபன், செல்வகுமார்,அப்துல்காதர், சாமிசுந்தரம், செந்தில், செய்யதுசுல்தான், உபயதுல்லா மற்றும் பாம்பன் நாட்டுப்படகு மீனவர் சங்கபிரதிநிதி அருள் உள்ளிட்ட 100–க்கும் மேற்பட்ட மீனவர்கள் மண்டபம்
தெற்குதுறைமுக பகுதி அருகே உள்ள மீன்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வந்தனர்.அப்போது மீனவர்களை மீன்துறை அலவலகத்திற்கு செல்லவிடாமல் மண்டபம் போலீஸ் நிலைய ஆய்வாளர் ராமலட்சுமி தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
தொடர்ந்து மீனவர்கள் மீன்துறை அலுவலகம் செல்லும் பாதையிலேயே அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.
இது பற்றி தகவல்அறிந்ததும் மீன்துறை துணை இயக்குனர் காத்தவராயன்,போராட்டம் நடத்திய மீனவர்களை நேரில் சந்தித்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அவர், தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் படகுகளை முழுமையாக தடுத்து நிறுத்துவதாகவும்,மீறி செல்லும் படகுகள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்ததை தொடர்ந்து மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர்.
இதுபற்றி ராமேசுவரம் விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதி என்.ஜே.போஸ் கூறியதாவது:– தடை செய்யப்பட்ட இரட்டைமடிவலை மீன்பிடிப்பால் தான் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை தாக்குதல் நடத்தி சிறைபிடித்து வரும் சம்பவம் அதிகமாக நடந்து வருகிறது.தடை செய்யப்பட்ட வலைகளில் மீன்பிடிப்பதால் தான் இந்திய–இலங்கை மீனவர்களின் பேச்சுவார்த்தைக்கு இடையூறாக இருந்து வருகிறது. இரட்டை மடிவலையில் மீன் பிடிப்பதை உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால் அடுத்த கட்டமாக தமிழகம் தழுவிய அளவில் மிகப் பெரிய போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.