ஈரோடு மாவட்டத்தில் 83 இடங்களில் அரசு பள்ளிக்கூடங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கின மாணவர் சேர்க்கையை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி பார்வையிட்டார்
ஈரோடு மாவட்டத்தில் 83 இடங்களில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் நேற்று தொடங்கின. மாணவர் சேர்க்கையை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி பார்வையிட்டார்.
ஈரோடு,
தமிழகம் முழுவதும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. முதல் கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு மாதிரி பள்ளிக்கூடத்தில் எல்.கே.ஜி. வகுப்புகள் தொடங்கி நடத்தப்பட்டு வருகின்றன. 2–வது கட்டமாக அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிக்கூடங்களுடன் இணைந்து செயல்படும் அங்கன்வாடி மையங்களை கே.ஜி. வகுப்புகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி நேற்று முதல் அரசு பள்ளிக்கூடங்களில் எல்.கே.ஜி, மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டன.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு உள்ளிட்ட 14 ஒன்றியங்களிலும் 83 பள்ளிக்கூடங்களுடன் இணைந்து செயல்படும் 89 அங்கன்வாடி மையங்கள் அந்தந்த பள்ளிக்கூட எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளாக மாற்றப்பட்டன.
அங்கன்வாடி மையத்தில் ஏற்கனவே படித்து வரும் 3 வயது முதல் 4 வயது வரையான குழந்தைகள் எல்.கே.ஜி.யிலும், 4 வயது முதல் 5 வயது வரையான குழந்தைகள் யு.கே.ஜி. வகுப்பிலும் சேர்க்கப்பட்டனர். இதற்கு அந்தந்த குழந்தைகளின் பெற்றோரும் ஒப்புதல் அளித்து ஆர்வத்துடன் வந்து தங்கள் குழந்தைகளை சேர்த்தனர். இது தவிர அரசு பள்ளிக்கூடங்களில் எல்.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படும் செய்தி அறிந்த பெற்றோர் பலரும் தங்கள் குழந்தைகளுடன் ஆர்வமாக வந்து மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டனர். அந்தந்த பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
புதிதாக தொடங்கப்பட்டு உள்ள எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆர்.பாலமுரளி பார்வையிட, ஈரோடு எஸ்.கே.சி.ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கூடத்துக்கு வந்தார். அப்போது தலைமை ஆசிரியை கே.சுமதி தலைமையில் ஆசிரியைகள் மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டு இருந்தனர். அங்கு வந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி மாணவர் சேர்க்கையை பார்வையிட்டு, அதுபற்றி தலைமை ஆசிரியையிடம் கேட்டு அறிந்தார். பின்னர் அவர் அங்கன்வாடி மையங்கள், முழுமையான எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளாக செயல்பட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். எஸ்.கே.சி. மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கூடத்தில் நேற்று 2 மையங்களையும் சேர்த்து 17 குழந்தைகள் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளில் சேர்க்கப்பட்டனர். அங்கன்வாடி மைய அமைப்பாளர்கள் பூவரசி, காயத்திரி ஆகியோர் மாணவர் சேர்க்கைக்கு உதவியாக இருந்தனர்.
அங்கிருந்து காவிரி ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கூடம் சென்ற மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி, மாணவர் சேர்க்கை குறித்து ஆசிரியர்களிடம் கேட்டு அறிந்தார். அவருடன் மாவட்ட கல்வி அதிகாரி முத்துக்கிருஷ்ணன் உடன் இருந்தார்.
இதுபோல் திருநகர்காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்பட ஈரோடு மாவட்டத்தில் 83 பள்ளிக்கூடங்களிலும் நேற்று எல்.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டன. ஈரோடு நகர்ப்புறம் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் எல்.கே.ஜி.வகுப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு பலரும் ஆர்வமாக இருந்தனர். பெருந்துறையை அடுத்து உள்ள வெட்டையன்கிணறு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கூடத்தில் நேற்று 10–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் புதிதாக எல்.கே.ஜி. வகுப்புகளில் சேர்க்கப்பட்டனர். அனைவரையும் பள்ளிக்கூட தலைமை ஆசிரியை ஜெ.பானுரேகா தலைமையில் ஆசிரிய–ஆசிரியைகள் வரவேற்றனர்.
இதுபோல் பெரும்பாலான பள்ளிக்கூடங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பிளக்ஸ் பேனர்கள், அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு இருந்தன. மாவட்ட கல்வி அதிகாரிகள், வட்டார கல்வி அதிகாரிகள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்களும் மாணவர் சேர்க்கையை பார்வையிட்டனர்.
ஆனால், கல்வித்துறையால் எல்.கே.ஜி. வகுப்புகளுக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியைகள் யாரும் நேற்று பணியில் சேரவில்லை.
இதுபற்றி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி கூறியதாவது:–
ஈரோடு மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட 89 அங்கன்வாடி மையங்களும் எல்.கே.ஜி. வகுப்புகளாக செயல்பட தொடங்கி உள்ளன. அரசு பள்ளிக்கூடங்களில் கே.ஜி.வகுப்புகள் தொடங்கி இருப்பது நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கிறது. நான் பார்வையிட்ட பள்ளிக்கூடங்களில் பெற்றோர்கள் ஆர்வமுடன் வந்து மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டனர்.
கே.ஜி. வகுப்புகளுக்கு என்று தனியாக நியமிக்கப்பட்டு இருக்கும் ஆசிரியைகள் தங்களுக்கு உரிய உத்தரவை பெற்றுக்கொண்டு விரைவில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிக்கூடங்களில் பணியில் சேருவார்கள். அதுவரை குழந்தைகளுக்கு உரிய வகையில் அந்தந்த பள்ளிக்கூட ஆசிரியைகள் பாடம் கற்றுத்தருவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசு பள்ளிக்கூடங்களில் எல்.கே.ஜி. வகுப்பு தொடங்கி இருப்பது குறித்து பெற்றோர் தரப்பில் ஒருவர் கூறும்போது, ‘எங்களைப்போன்ற கூலித்தொழிலாளர்கள், நடுத்தர மக்களும் தங்கள் குழந்தைகளை ஆங்கில வழியில் படிக்கவைக்க முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அரசு பள்ளிக்கூடங்களில் ஆங்கில வழிக்கல்வியை கொண்டு வந்தார். தற்போதைய அரசு இன்னும் ஒரு படி மேலாக எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை தொடங்கி இருக்கிறது. இது மகிழ்ச்சியான விஷயமாகும். உடனடியாக சிறந்த முறையில் தகுதியான ஆசிரியைகளை நியமனம் செய்து பள்ளிக்கூடம் சிறப்பாக இயங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.