தண்டலை ஊராட்சியில் ரூ.30 லட்சத்தில் அம்மா பூங்கா-உடற்பயிற்சி கூடம் அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார்

தண்டலை ஊராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அம்மா பூங்கா- உடற் பயிற்சி கூடத்தை அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார்.

Update: 2019-01-19 22:45 GMT
திருவாரூர்,

திருவாரூர் ஒன்றியம் தண்டலை ஊராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கினார். இதில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார்.

பின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தபடி கிராம ஊராட்சிகளில் ரூ.20 லட்சம் மதிப்பில் குழந்தைகள், பெண்கள் மற்றும் பெரியோர்களுக்கு பொழுதுபோக்கும் வகையில் நடைபாதைகள், சிமெண்டு பெஞ்சு, குடிநீர் வசதிகள், புல்தரை, பசுமை தோட்டம் மற்றும் கழிப்பறை ஆகிய வசதிகளுடன் கூடிய அம்மா பூங்கா, ரூ.10 லட்சம் மதிப்பில் உடற்பயிற்சி சாதனங்களுடன் கூடிய அம்மா உடற்பயிற்சி கூடம் தண்டலை ஊராட்சியில் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் 10 இடங்களில் அம்மா பூங்கா அமைத்திட திட்டமிட்டு, 3 இடங்களில் பணிகள் முடிந்துள்ளது. பொங்கல் சிறப்பு தொகுப்புடன் ரூ.ஆயிரமும் வழங்கப்பட்டுள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து நிருபர் கேள்வி கேட்டபோது, மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழக அரசு ஒரு போதும் அனுமதிக்காது. இந்த திட்டத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தான் முடிவு எடுத்து அறிவிப்பார்கள். டெல்டா மாவட்டங்களில் சம்பா அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 789 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. பிற மாவட்டங்களில் 914 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இதில் உதவி கலெக்டர் முருகதாஸ், உதவி இயக்குனர் (பஞ்சாயத்து) சந்தானம், வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன், கூட்டுறவு சங்க தலைவர்கள் மணிகண்டன், மூர்த்தி, கலியபெருமாள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன், கூட்டுறவு நகர் நலச்சங்க தலைவர் செல்வராஜ், ஊராட்சி செயலாளர் கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் குமார் வரவேற்றார். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உஷாராணி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்