வேலூர் தோட்டபாளையத்தில் மளிகை குடோனில் பயங்கர தீ தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி அணைத்தனர்

வேலூர் தோட்டபாளையத்தில் மளிகை குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின. தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

Update: 2019-01-19 22:00 GMT
வேலூர்,

வேலூர் சத்துவாச்சாரி டபுள்ரோட்டை சேர்ந்தவர் சரவணன். இவர் வேலூர் தோட்டபாளையம் கெஜராஜ் நகர் பகுதியில் நெய், சமையல் எண்ணெய், மளிகை பொருட்களை வினியோகம் செய்யும் ஏஜென்சி நடத்தி வருகிறார். இந்த பொருட்களை வைப்பதற்காக குடோனும் வைத்துள்ளார். இங்கிருந்து வேலூர் நகரில் உள்ள ஆர்டர் செய்த மளிகைக்கடைகளுக்கு பொருட்கள் அனுப்பப்பட்டு வந்தன. நேற்று முன்தினம் வேலை நேரம் முடிந்ததும் குடோன் மற்றும் ஏஜென்சியை மூடிவிட்டு சரவணன் மற்றும் ஊழியர்கள் வீட்டுக்கு சென்றனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் குடோனில் எதிர்பாராத விதமாக தீ பிடித்துள்ளது. மளமளவென பரவிய தீ குடோன் முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் அந்த பகுதியை புகைமண்டலம் சூழ்ந்தது. அப்போது அந்த பகுதியில் வீட்டுக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தவர்களை புகை சூழ்ந்ததால் அவர்கள் அதிர்ச்சியுடன் எழுந்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் லட்சுமிநாராயணன் தலைமையில் நிலைய அலுவலர் விநாயகம் மற்றும் வீரர்கள் 4 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். குடோன் இருந்த தெருவுக்கு அருகே தீயணைப்பு வாகனங்கள் வந்தன. அந்த தெரு குறுகி காணப்பட்டதாலும், அங்கு வீடுகளின் முன்னால் மோட்டார்சைக்கிள் மற்றும் சரக்கு ஆட்டோக்கள் நிற்க வைக்கப்பட்டிருந்ததாலும் உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் அவர்களால் ஈடுபட முடியவில்லை. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மோட்டார்சைக்கிள் மற்றும் சரக்கு ஆட்டோக்களை அப்புறப்படுத்தினர்.

பின்னர் எரிந்து கொண்டிருந்த குடோன் மீது வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் காட்பாடி, ஆற்காடு தீயணைப்பு நிலையங்களிலிருந்தும் வீரர்கள் வாகனங்களில் வந்தனர். 30-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஓரளவுக்கு தீயை கட்டுப்படுத்தப்பட்ட பின்னரும் குடோனுக்குள் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அந்த குடோனின் சுவரில் விரிசல் ஏற்பட்டதால் தீயணைப்பு துறையினர் சுவரில் துளையிட்டு தீயை அணைக்க நடவடிக்கை எடுத்தனர். அதன்படி குடோனில் இருபுற சுவரிலும் பொக்லைன் எந்திரம் மூலம் ஒரு நபர் உள்ளே செல்லும் அளவுக்கு துளைகள் போடப்பட்டன. அதன் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் 3 மணி நேரம் போராடி காலை 7 மணிக்கு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீவிபத்தில் குடோனில் இருந்த மளிகை பொருட்கள், 10 இருசக்கரவாகனங்கள் என பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு நிலைய அதிகாரிகள் கருதுகின்றனர். இது தொடர்பாக வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்