சட்டசபை கட்சி கூட்டத்தை புறக்கணித்த 4 காங். எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா? அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்; பா.ஜனதா திட்டம்

சட்டசபை கட்சி கூட்டத்தை புறக்கணித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர். இதைதொடர்ந்து சட்டசபையில் அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

Update: 2019-01-19 23:30 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

ஆனால் 104 எம்.எல். ஏ.க்களை வைத்துள்ள பா.ஜனதா ஆட்சியை பிடிக்க முயற்சித்து வருகிறது. இதற்காக ஆபரேஷன் தாமரை மூலம் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியில் பா.ஜனதா ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ய போவதாகவும், அவர்கள் பா.ஜனதாவில் சேரப்போவதாகவும் தகவல் வெளியானது. இதனால் கூட்டணி ஆட்சி எந்த நேரமும் கவிழ்ந்து விடலாம் என்று கூறப்பட்டது.

ஆனால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டனர். மேலும் நேற்று முன்தினம் பெங்களூருவில் சித்தராமையா தலைமையில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களான ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் கமடள்ளி, உமேஷ் ஜாதவ், நாகேந்திரா ஆகிய 4 பேர் மட்டும் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களான உமேஷ் ஜாதவ், நாகேந்திரா மட்டும் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது பற்றி காங்கிரஸ் தலைவர்களுக்கு காரணம் தெரிவித்திருந்தனர். ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் கமடள்ளி ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது பற்றி எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

இதனால் அவர்கள் 2 பேரும் மீதும் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். அதே நேரத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் காங்கிரசில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர்களில் ரமேஷ் ஜார்கிகோளியிடம் இருந்து மந்திரி பதவி பறிக்கப்பட்டுள்ளதால், காங்கிரஸ் தலைவர்கள் மீது கடும் அதிருப்தியில் உள்ளார். மேலும் அவர் மும்பையில் முகாமிட்டுள்ளதுடன், பா.ஜனதா தலைவர் களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். இதனால் ரமேஷ் ஜார்கிகோளி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு எப்போது வேண்டுமானாலும் பா.ஜனதாவில் இணையலாம் என்று தெரிகிறது.

அதுபோல, உமேஷ் ஜாதவும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் சேருவது குறித்து தனது ஆதரவாளர் களுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தி உள்ளார். அவர்கள் பா.ஜனதாவில் சேரும்படி உமேஷ் ஜாதவுக்கு தெரிவித்திருப்பதாக சொல்லப்படுகிறது. சிஞ்சோலி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக உள்ள உமேஷ் ஜாதவை, கலபுரகி நாடாளுமன்ற தேர்தலில், நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவராக உள்ள மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எதிராக நிறுத்த பா.ஜனதா தீர்மானித்துள்ளது. இதனால் உமேஷ் ஜாதவ் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் இணைவது உறுதியாகி உள்ளது.

அதே நேரத்தில் நாகேந்திரா, மகேஷ் கமடள்ளியும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. ஆனால் ரமேஷ் ஜார்கிகோளி, உமேஷ் ஜாதவுடன் சேர்ந்து 4 பேர் மட்டும் ராஜினாமா செய்தால் கூட்டணி ஆட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட போவதில்லை என்றும், அதனால் மேலும் சில காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்களுடன் சேர்ந்தால் ராஜினாமா செய்ய நாகேந்திராவும், மகேஷ் கமடள்ளி ஆகியோர் தீர்மானித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து பா.ஜனதா தலைவர்களுடன் அவர்கள் 4 பேரும் ஆலோசனை நடத்தி வருவதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் தங்களது பதவியை ராஜினாமா செய்வது குறித்து இறுதி முடிவு எடுக்கலாம் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த மாதம்(பிப்ரவரி) 8-ந் தேதி தொடங்குகிறது. இதனால் கூட்டத்தொடருக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பாக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்யலாம் என்றும், பின்னர் கூட்டத்தொடரில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சிக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்று கூறி அரசின் மிது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரவும் பா.ஜனதா திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுதொடர்பாக எடியூரப்பா தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாகவும், பா.ஜனதாவின் மேலிடம் அனுமதி வழங்கியதும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வது எப்போது என்பது பற்றி இறுதி முடிவு எடுக்க உள்ளதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால் கர்நாடக அரசியலில் கடந்த 4 நாட்களாக நீடித்து வரும் பரபரப்பை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.

மேலும் செய்திகள்