திருவண்ணாமலை பஸ் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்த மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை

திருவண்ணாமலை பஸ் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்த மோட்டார்சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2019-01-18 22:30 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை பஸ் நிலையம் ஏற்கனவே நெருக்கடியில் சிக்கி திணறி வருகிறது. பஸ் நிலையத்துக்குள் வரும் பஸ்கள் உரிய இடத்திற்குள் சென்று நிறுத்துவதற்குள் நடுவழியிலேயே நிறுத்தப்படுவதால் பயணிகள் அந்த இடத்திலேயே இறங்குகின்றனர். பின்னால் வரும் பஸ்களும் அந்த இடத்தை கடந்து செல்ல முடியாமல் வரிசை கட்டி நிறுத்தப்படுகின்றன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மேலும் பஸ் நிலையத்தில் பயணிகள் நிற்கும் இடங்களில் மோட்டார்சைக்கிள்களை சிலர் வாகன காப்பகம்போல் நிறுத்துவதால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. அதற்கும் மேலாக இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் பஸ் நிலையத்திற்குள் பயணிகள் செல்கிறார்களே என நினைக்காமல் அதி வேகத்தில் செல்வதால் சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது.

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி, பொறுப்பேற்ற நாளில் இருந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். இதில் பஸ் நிலையத்திற்குள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மோட்டார்சைக்கிள்கள் உள்ளே செல்ல தடை செய்து உத்தரவிட்டு உள்ளார்.

ஆனால் அதனையும் மீறி சிலர் பஸ் நிலையத்திற்குள் மோட்டார் சைக்கிளில் சென்று போக்குவரத்து இடையூறு ஏற்படுத்துவதாக புகார்கள் எழுந்தது.

இந்த நிலையில் நேற்று காலை திருவண்ணாமலை டவுன் போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை தலைமையிலான போக்குவரத்து போலீசார் பஸ் நிலையத்துக்கு திடீரென வந்தனர். அவர்கள் பஸ் நிலையத்திற்குள் அத்துமீறி மோட்டார்சைக்கிள்கள் மூலம் உள்ளே நுழையும் நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் 1 மணி நேரத்திற்குள் சுமார் 50-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை அதிரடியாக பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். மேலும் மோட்டார்சைக்கிளில் இனி பஸ் நிலையத்திற்குள் வரக் கூடாது என்று எச்சரிக்கையும் விடுத்தனர்.

இதில் கடமை மாறாமல் ஒரு போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிளையும் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை அங்கிருந்த பொது மக்கள் பாராட்டினர்.

இது போன்ற சோதனை தொடர்ந்து நடைபெறும் என்றும், பொது மக்கள் சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும், இல்லையென்றால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

மேலும் செய்திகள்