திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள இடத்துக்கு திருவள்ளுவர் பூங்கா என பெயர் சூட்டப்படும் : மேயர் கங்காம்பிகே அறிவிப்பு

பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள இடத்துக்கு திருவள்ளுவர் பூங்கா என பெயர் சூட்டப்படும் என்று மாநகராட்சி மேயர் கங்காம்பிகே அறிவித்தார்.

Update: 2019-01-16 22:50 GMT
பெங்களூரு,

பெங்களூருவில் ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு தலைவர் எஸ்.எஸ்.பிரகாசம் ஏற்பாட்டில் திருவள்ளுவர் தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் நேற்று முன்தினமும் திருவள்ளுவர் தினவிழா கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, அல்சூர் ஏரிக்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள இடம் வண்ண மலர்கள், கரும்புகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. விழாவில், பெங்களூரு மாநகராட்சி மேயர் கங்காம்பிகே, எம்.எல்.ஏ.க்களான ரோஷன் பெய்க், என்.ஏ.ஹாரீஸ், மாநகராட்சி முன்னாள் மேயரும், தற்போதைய கவுன்சிலருமான சம்பத்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டு திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர், மாநகராட்சி மேயர் கங்காம்பிகே பேசும்போது கூறியதாவது:-

‘விஷ்வகவி’ திருவள்ளுவர் தினவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. திருவள்ளுவர் தமிழர்களுக்கும் மட்டுமின்றி உலக மக்கள் அனைவருக்கும் சொந்தம். பெங்களூருவில் அனைத்து மொழி பேசும் மக்களும் உள்ளனர். தமிழர்-கன்னடர்கள் இடையே நல்ல ஒற்றுமை உள்ளது. இந்த ஒற்றுமை வரும் நாட்களிலும் தொடர வேண்டும்.

திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பூங்காவுக்கு திருவள்ளுவர் பூங்கா என்று பெயர் வைப்பது குறித்து மாநகராட்சி கூட்டத்தில் பரிசீலனை செய்யப்படும். ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினத்தை மாநகராட்சி சார்பில் பெங்களூருவில் கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இதுபற்றி அரசிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில், சாந்திநகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான என்.ஏ.ஹாரீஸ் முழுவதுமாக தமிழில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘திருவள்ளுவர் அனைத்து தரப்பு மக்களுக்கும் நல்ல வழிகாட்டியாக இருக்கிறார். அவர் கூறிய கருத்துக்களை உள்வாங்கி அதன் வழி நடக்க வேண்டும். பேச்சு என்பது ஆண்டவன் கொடுத்த பரிசு. இதனால் தமிழில் பேச எனக்கு எந்த பயமும் இல்லை’ என்றார்.

விழாவில், எஸ்.எஸ்.பிரகாசம் வரவேற்புரை ஆற்றி கலந்து கொண்டவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார். முடிவில் பெங்களூரு தமிழ் சங்க தலைவர் தி.கோ.தாமோதரன் நன்றியுரை ஆற்றினார். இந்த விழாவில் முன்னாள் மேயர் சம்பத்ராஜ், இந்து நாடார் அசோசியேசன் முன்னாள் தலைவர் பாலசுந்தரம் நாடார், கர்நாடக தேவர் சங்க முன்னாள் தலைவர் ஞானகுரு, சாந்திநகர் காங்கிரஸ் பிரமுகர் பி.மோகன், கன்னடர்-தமிழர் நல்லிணக்க சமூக நற்பணி அறக்கட்டளை தலைவர் ராமச்சந்திரன், பெங்களூரு தமிழ்ச்சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன், பாரதிநகர் பிளாக் காங்கிரஸ் தலைவர் ஜி.ராஜேந்திரன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவையொட்டி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. மேலும் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

மேலும் செய்திகள்