மாமல்லபுரம் சிற்பங்களை வியந்து ரசித்த துணை ஜனாதிபதி

மாமல்லபுரம் சிற்பங்களை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது குடும்பத்தினருடன் வியந்து ரசித்தார்.

Update: 2019-01-16 23:00 GMT

மாமல்லபுரம்,

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தனது மனைவி உஷா மற்றும் குடும்பத்தினருடன் நேற்று மாமல்லபுரம் வந்தார். அவரை கடற்கரை கோவில் நுழைவு வாயிலில் மாமல்லபுரம் சுற்றுலாத்துறை அதிகாரி சக்திவேல் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றார்.

பின்னர் அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோவில் ஆகிய புராதன சிற்பங்களை துணை ஜனாதிபதி சுற்றிப் பார்த்து வியந்தார். புராதன சிற்பங்கள் பற்றிய வரலாறுகளை தொல்லியல் துறையின் சென்னை வட்ட கண்காணிப்பாளர் சுப்பிரமணியன், மாமல்லபுரம் மூத்த சுற்றுலா வழிகாட்டிகள் எம்.கே.சீனிவாசன் பாலன் ஆகியோர் விளக்கி கூறினர். அப்போது பல்லவர்களின் வரலாறுகள் பற்றியும், சிற்பங்கள் வடிக்கப்பட்ட காலம் குறித்தும் அவர் ஆர்வமாக கேட்டு தெரிந்து கொண்டார்.

மாமல்லபுரம் சுற்றுலா வந்த பயணிகள் சிலரும் கடற்கரை கோவில் வளாகத்தில் துணை ஜனாதிபதியுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வருகையையொட்டி காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி தலைமையில் மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பராஜ், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் உள்ளிட்ட 100–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் பலத்த சோதனை செய்யப்பட்ட பிறகே புராதன சிற்பங்களை கண்டுகளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

துணை ஜனாதிபதி வரவேற்பு நிகழ்ச்சியில் மாமல்லபுரம் தொல்லியல் துறை அதிகாரி எஸ்.பரணிதரன், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, காஞ்சீபுரம் எம்.பி. மரகதம் குமரவேல், மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) கேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்