ஊட்டி நகரில் உலா வந்த காட்டெருமைகள் வாகன ஓட்டிகள் அச்சம்

ஊட்டி நகரில் உலா வந்த 2 காட்டெருமைகளால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

Update: 2019-01-16 22:30 GMT

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் அதிக வனப்பகுதிகளை கொண்டு உள்ளது. மலைப்பிரதேசமான ஊட்டியை சுற்றி தீட்டுக்கல், தொட்டபெட்டா, கேர்ன்ஹில், லவ்டேல் உள்ளிட்ட வனப்பகுதிகள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் காட்டெருமை, சிறுத்தைப்புலி, கடமான், காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. வனப்பகுதிகளையொட்டி கட்டப்பட்டு உள்ள தனியார் விடுதிகளில் அதிக ஒலி எழுப்பப்படுவதாலும், உணவு தட்டுப்பாடு ஏற்படுவதாலும் அடிக்கடி காட்டெருமைகள் ஊட்டி நகருக்குள் புகுந்து விடுகிறது.

தற்போது ஊட்டியில் உறைபனி பொழிவு தொடர்ந்து காணப்படுவதால், வனப்பகுதிகளில் உள்ள புல்வெளிகள் கருகி வருகின்றன. அவை பசுமை இழந்து காய்ந்து விட்டது. இதனால் வனவிலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையே ஊட்டி–கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஹில்பங்க் பகுதியில் இரண்டு காட்டெருமைகள் நேற்று உலா வந்தன. இதனை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டெருமைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

வாகனங்கள் அதிகளவில் வந்து செல்லும் முக்கிய சாலையான ஊட்டி–கூடலூர் சாலையில் காட்டெருமைகள் உலா வந்ததால், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். இதையடுத்து அந்த 2 காட்டெருமைகள் புனித ஸ்டீபன் ஆலய வளாகம் வழியாக கலெக்டர் அலுவலக சாலைக்கு வந்தது. பின்னர் அவை ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள அசெம்பிளி தியேட்டர் வழியாக சென்றது. இதனால் தியேட்டரில் டிக்கெட் எடுப்பதற்காக வெளியே நின்றிருந்தவர்கள் மற்றும் அந்த வழியாக நடந்து சென்ற சுற்றுலா பயணிகள் அச்சத்தில் அலறினர்.

அதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட வன அதிகாரி சுமேஷ் சோமன் மற்றும் வனத்துறையினர் காட்டெருமைகளை விரட்ட முயன்றனர். ஆனால், அது பழங்குடியினர் பண்பாட்டு மைய வளாகத்துக்குள் நுழைந்து விட்டு வெளியே வந்தது. இதையடுத்து ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அருகே உள்ள தனியார் பங்களாவுக்குள் சென்றது. அங்கு வளர்ந்திருந்த புற்களை மேய்ந்தன. பின்னர் வனத்துறையினர் அந்த 2 காட்டெருமைகளையும் வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்த சம்பவத்தால் ஊட்டியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்