காணும் பொங்கலை முன்னிட்டு சுற்றுலா தளங்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
காணும் பொங்கலை முன்னிட்டு சுற்றுலா தளங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
விக்கிரமசிங்கபுரம்,
காணும் பொங்கலை முன்னிட்டு சுற்றுலா தளங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
சுற்றுலா தளம்
விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள பாபநாசம், அகஸ்தியர் அருவி, சொரிமுத்து அய்யனார் கோவில் ஆகிய பகுதிகளில் நேற்று பொங்கல் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் குடும்பத்துடன் வந்து தாமிரபரணி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் காரையார் காணிக்குடியிருப்பு கோவிலுக்கு வந்த பயணிகள் ஆற்றங்கரை மற்றும் கோவில் பகுதிகளில் சமைத்தும் சாப்பிட்டனர். சுற்றுலா பயணிகள் அருவி பகுதிகளில் குளித்து மகிழ்ந்ததுடன், செல்பியும் எடுத்து கொண்டனர்.
போக்குவரத்து நெரிசல்
சுற்றுலா வந்த பயணிகள் கார்,வேன், டூவிலர் போன்ற வாகனங்களில் வந்தனர். இதனால் தலையணை, அகஸ்தியர் அருவி செல்லும் வாகனங்கள் நிறுத்த இடமில்லாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அகஸ்தியர் அருவி, சொரிமுத்து அய்யனார் கோவில் செல்லும் வாகனங்கள் சோதனைசாவடியில் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசலை வனத்துறை ஊழியர் செய்திருந்தனர்.
மணிமுத்தாறு அருவி
பொங்கல் விடுமுறை முன்னிட்டு நேற்று மணிமுத்தாறு அருவி, பூங்காவில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வந்து குவிந்தனர். இந்த அருவிக்கு நீண்ட நாட்களுக்குப் பின் அனுமதியளித்ததால் ஏராளமான பயணிகள் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர். அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் ஒரே நேரத்தில் நூற்றுக் கணக்கான வாகனங்களில் வந்ததால் வனச் சோதனைச் சாவடியில் கடும் நெரிசல் ஏற்பட்டது. அருவிக்குச் செல்லும் பாதை மிகவும் மோசமாக இருந்ததால் வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்பட்டது. எனவே சாலையை சீரமைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.மணிமுத்தாறு பூங்காவிலும் ஏராளமான பயணிகள் குடும்பத்துடன் விளையாடி, அமர்ந்து உணவருந்தியும் சென்றனர். சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால், விக்கிரமசிங்கபுரம் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
தலையணை
களக்காடு தலையணையில் நேற்று காணும் பொங்கலை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்ந்தனர். நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமான பயணிகள் வந்து குவிந்தனர். இவர்கள் தலையணையில் குளித்தும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் சிறுவர்கள் விளையாடியும் மகிழ்ந்தனர். அங்கேயே அமர்ந்து தாங்கள் கொண்டு வந்த உணவை சாப்பிட்டு சென்றனர். பயணிகளின் வசதிக்காக கழிப்பறை, குடிநீர் வசதி, உடை மாற்றும் அறை, வாகன நிறுத்துமிடம் ஆகிய வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
வனத்துறை சோதனைசாவடியில் சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வருகிறார்களா? என சோதனை நடத்தப்பட்டது. தலைமை வன பாதுகாவலர் அன்வர்தீன் உத்தரவின் பேரில், களக்காடு துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் ஆலோசனையின்படி, வனசரகர்கள் புகழேந்தி, பாலாஜி மற்றும் களக்காடு போலீஸ் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதேபோல் களக்காடு தேங்காய் உருளி அருவி, பச்சையாறு அணை ஆகிய பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.