பொங்கல் விடுமுறை: மசினகுடி சீகூர் நீர்வீழ்ச்சியில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்
பொங்கல் விடுமுறை காரணமாக மசினகுடியில் உள்ள சீகூர் நீர்வீழ்ச்சியை காண சுற்றுலா பயணிகள் குவித்து வருகின்றனர்.
மசினகுடி,
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் மசினகுடியும் ஒன்று. முதுமலை புலிகள் காப்பகத்தினுள் அமைந்துள்ளதால் மசினகுடிக்கு வந்து தங்கி காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள், கரடிகள் உள்பட பல்வேறு வனவிலங்குகளையும், இயற்கை அழகையும் கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் மசினகுடிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் முதுமலை தெப்பகாடு பகுதியில் வனத்துறையினர் சார்பாக செயல்பட்டு வரும் வாகன சவாரி மற்றும் யானை சவாரி மூலமாக வனபகுதிக்குள் சென்று வனவிலங்குகளை பார்த்து வருகின்றனர். மேலும் தற்போது முதுமலை புலிகள் காப்பகத்துடன் இணைக்கப்பட்ட சிங்காரா, சீகூர் வனபகுதிகளுக்குள் செல்லவும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தொடர்விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மசினகுடியில் குவிந்து வருகின்றனர்.
இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் மசினகுடியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் சீகூர் வனப்பகுதிக்கு செல்ல அனுமதி கட்டணத்தை செலுத்திய பின்னர் அங்கிருந்து தனியார் ஜீப்புகளில் மாயார் அருகே அமைந்துள்ள சீகூர் நீர்வீழ்ச்சி காட்சிமுனைக்கும் அழைத்து செல்லப்படுகின்றனர். காட்சிமுனை பகுதியில் இருந்து சீகூர் நீர்வீழ்ச்சியை கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள், ஆர்வத்துடன் நண்பர்களுடன் செல்பி, போட்டோ எடுத்து மகிழ்கின்றனர். இங்கு காலை 6 முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.