கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களில் வறட்சி பாதித்த பகுதிகளில் மந்திரிகள் குழுவினர் ஆய்வு

கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களில் வறட்சி பாதித்த பகுதிகளை மந்திரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். அவர்கள் விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து கொண்டனர்.

Update: 2019-01-11 22:30 GMT
கோலார் தங்கவயல்,

கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இந்த நிலையில் கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களில் வறட்சி பாதித்த பகுதிகளை 11-ந்தேதி (அதாவது, நேற்று) டி.கே.சிவக்குமார் தலைமையிலான மந்திரிகள் குழுவினர் ஆய்வு செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று மந்திரிகள் குழுவினர் கோலார் மாவட்டத்துக்கு வந்தனர். விவசாயத்துறை மந்திரி சிவசங்கரரெட்டி தலைமையில் மந்திரிகள் டி.சி.தம்மண்ணா, சீனிவாஸ், வெங்கடரமணப்பா ஆகியோர் வந்தனர். மந்திரிகள் டி.கே.சிவக்குமார், எம்.டி.பி.நாகராஜ் ஆகியோர் வரவில்லை.

இதையடுத்து மந்திரிகள் குழுவினர் கோலார் மாவட்டத்தில் வறட்சி பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவர்கள் உதப்பன்னஹள்ளி, மதேரஹள்ளி உள்பட 10 கிராமங்களுக்கு சென்று வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிட்டனர்.

விவசாயிகளிடம்...

அப்போது அவர்கள், கலெக்டர் மஞ்சுநாத்திடம் வறட்சி பாதித்த பகுதிகளில் தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்து கொண்டனர். பின்னர் அங்குள்ள விவசாயிகளிடம் மந்திரிகள் குறைகளை கேட்டறிந்து கொண்டு, அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். உதப்பன்னஹள்ளி கிராமத்தில் உள்ள ஏரியில், கே.சி.வேலி நீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் நிரப்பப்பட்டிருந்தது.

அந்த தண்ணீரை மந்திரி சிவசங்கரரெட்டி தனது கைகளில் அள்ளி பருகினார். அப்போது அவர், இந்த தண்ணீர் நன்றாக தான் உள்ளது. ஏன் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று தெரியவில்லை என்றார்.

ஆலோசனை

இதையடுத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மந்திரிகள் சிவசங்கரரெட்டி, டி.சி.தம்மண்ணா, சீனிவாஸ், வெங்கடரமணப்பா ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் வறட்சி பாதித்த பகுதிகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

சிக்பள்ளாப்பூர்

பின்னர், சிவசங்கரரெட்டி தலைமையிலான மந்திரிகள் குழுவினர் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் வறட்சி பாதித்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்தனர். அப்போது விவசாயிகள், கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், எங்களுக்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட மந்திரிகள், தக்க நிவாரணம் வழங்குவதாக உறுதி அளித்தனர்.

மேலும் செய்திகள்