மாறுவேடத்தில் வந்த போலீசாரிடம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் பணிஇடை நீக்கம்

மாறுவேடத்தில் வந்த போலீசாரிடம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் பதி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2019-01-10 23:56 GMT
ஈரோடு,

சத்தியமங்கலத்தில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக பதி (வயது 47) என்பவர் பணியாற்றி வந்தார். அவர் லாரி டிரைவர்களிடம் லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரை தொடர்ந்து ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். கடந்த 8-ந் தேதி இரவு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 2 பேர் டிரைவர், கிளனரை போல மாறுவேடத்தில் சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி நோக்கி லாரியில் சென்றனர். அப்போது சிக்கரசம்பாளையம் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் பதி அந்த லாரியை நிறுத்தி லஞ்சம் கேட்டு உள்ளார்.

மாறுவேடத்தில் இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரும் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து, அவரை கையும் களவுமாக பிடித்தனர். அதன்பின்னர் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக வருமாறு இன்ஸ்பெக்டர் பதியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அழைத்தனர். அதற்கு தன்னுடைய காரில் போலீஸ் நிலையத்திற்கு வருவதாக தெரிவித்த அவர், அதே காரில் போலீஸ் நிலையத்திற்கு செல்லாமல் தப்பி சென்றார்.

தலைமறைவாக உள்ள இன்ஸ்பெக்டர் பதியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்தநிலையில் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் பதியின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க ஈரோடு மாவட்ட போலீஸ் நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர் மீது நடவடிக்கை எடுக்க கோவை சரக டி.ஐ.ஜி.க்கு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை செய்தார். டி.ஐ.ஜி. உத்தரவின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பதி நேற்று பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்