குடிநீரில் விஷம் கலந்த கொடூரம்; தண்ணீர் குடித்த கவுன்சிலரின் தாய் சாவு மேலும் 4 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி
யாதகிரியில் குடிநீரில் விஷம் கலக்கப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. அந்த தண்ணீரை குடித்த கவுன்சிலரின் தாய் உயிர் இழந்தார். மேலும் 4 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெங்களூரு,
யாதகிரி மாவட்டம் சுரபுரா தாலுகா கெம்பாவி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட முதனூரு கிராமத்தை சேர்ந்தவர் கொன்னம்மா(வயது 62). இவரது மகன் மவுனேஷ். இவர், கவுன்சிலர் ஆவார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டு குழாயில் வந்த தண்ணீரை கொன்னம்மா பிடித்தார். மேலும் குழாயில் வந்த தண்ணீரை பிடித்து அவர் குடித்தார். அந்த தண்ணீரை குடித்த சில நிமிடங்களில் கொன்னம்மா திடீரென்று வாந்தி மற்றும் வயிற்று வலியால் துடித்தார். மேலும் அவர் ரத்த வாந்தியும் எடுத்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மவுனேஷ் தனது தாயை அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இதற்கிடையில், முதனூரு கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ், தாயம்மா உள்ளிட்ட 4 பேருக்கும் வாந்தி, வயிற்று வலி ஏற்பட்டது. அவர்களும் நேற்று முன்தினம் இரவு குழாயில் வந்த தண்ணீரை பிடித்து குடித்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 4 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கொன்னம்மாவின் உடல் நிலை மோசமானது. இதையடுத்து, நேற்று அதிகாலையில் அவர் மேல் சிகிச்சைக்காக கலபுரகி மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே கொன்னம்மா இறந்து விட்டதாக தெரிவித்தார்.
தண்ணீரில் விஷம் கலப்பு
இதற்கிடையில், நேற்று முன்தினம் இரவு முதனூரு கிராமத்திற்கு குழாயில் வந்த தண்ணீரை குடித்ததாலும், அதில் விஷம் கலக்கப்பட்டு இருந்த தாலும் தான் கொன்னம்மா உயிர் இழந்ததாக தகவல் பரவியது. இதுபற்றி அறிந்ததும் அரசு அதிகாரிகள் மற்றும் கெம்பாவி போலீசார் முதனூரு கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது முதனூரு கிராமத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் விஷம் கலக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, முதனூரு கிராமத்திற்கு நேற்று முன்தினம் வந்த குடி தண்ணீரை யாரும் குடிக்க வேண்டாம் என்று கிராம மக்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தண்ணீர் தொட்டிக்குள் விஷத்தை ஊற்றியது யார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து கெம்பாவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குடி தண்ணீரில் விஷம் கலந்த மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் முதனூரு கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விசாரணை நடத்த குமாரசாமி உத்தரவு
இந்த நிலையில், இதுபற்றி அறிந்த முதல்-மந்திரி குமாரசாமி உடனடியாக யாதகிரி மாவட்ட கலெக்டரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது சம்பவம் குறித்து கேட்டறிந்தார். மேலும் உடனடியாக சம்பவம் நடந்த கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டார்.
அதுமட்டுமல்லாமல் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அத்தகையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்-மந்திரி குமாரசாமி, யாதகிரி மாவட்ட கலெக்டர் மற்றும் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.