தாம்பரம் கிழக்கு பகுதியில் 74 குப்பை தொட்டிகள் அகற்றம்; சாலையில் கொட்டினால் அபராதம்

தாம்பரம் கிழக்கு பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் வைக்கப்பட்ட 74 குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டன. இதனால் பொதுமக்கள் சாலையில் குப்பைகள் கொட்டி வருகின்றனர். அவ்வாறு கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி கமி‌ஷனர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Update: 2019-01-09 22:00 GMT

தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரம் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இதில் கிழக்கு பகுதியில் உள்ள கிழக்கு தாம்பரம், சேலையூர் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டு வந்தது. தற்போது தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவடைந்துவிட்டதால் தனியார் நிறுவன ஊழியர்களை மட்டும் வேலைக்கு வைத்துக்கொண்டு நகராட்சி சுகாதாரத்துறையினர் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் தனியார் நிறுவனத்தினர் வைத்திருந்த 74 குப்பை தொட்டிகளை அவர்கள் எடுத்துச்சென்றுவிட்டனர். இதனால் குப்பைகளை தொட்டிகளில் கொட்டி வந்தவர்கள், சாலைகளில் போடுவதால் ஒவ்வொரு இடங்களிலும் தகராறு ஏற்பட்டு வருகிறது.

குப்பைகளை வீடு வீடாகச்சென்று துப்புரவு பணியாளர்கள் எடுத்து செல்வார்கள் என்றும், சாலைகளில் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் நகராட்சி கமி‌ஷனர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

இதுதொடர்பாக தாம்பரம் நகராட்சி கமி‌ஷனர் கிருஷ்ணமூர்த்தி, மேலும் கூறியதாவது:–

தாம்பரம் நகராட்சி பகுதியை தூய்மையாக வைத்துக்கொள்ள பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் 7 பசுமை உரக்குடில்களும், 20 சிறியவகை உரக்கிடங்குகளும் செயல்பட்டு வருகிறது.

ஒவ்வொரு வார்டாக குப்பைகளை எடுக்க 79 பேட்டரி வாகனங்கள் வரவுள்ளது. இதில் 22 வாகனங்கள் வார்டுகளில் குப்பைகளை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. 16 குப்பை எடுக்கும் மினிவேன்கள் வரவுள்ளது.

நகராட்சி பகுதி முழுவதும் தனியார் ஒப்பந்த ஊழியர்கள் உள்பட 440 துப்புரவு தொழிலாளிகள் பணியில் ஈடுபட்டு உள்ளனர். பலஆண்டுகளாக சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வந்த கன்னடபாளையம் குப்பைமேடு பயோமைனிங் முறையில் அகற்றி வருகிறோம்.

நகரை தூய்மைபடுத்தும் பணியில் பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பது எப்படி? என வீடு வீடாக நோட்டீஸ் கொடுத்து நகராட்சி பணியாளர்கள் விளக்கம் அளித்து உள்ளனர்.

தினமும் நகராட்சி பகுதியில் அனைத்து தெருக்களிலும் உள்ள வீடுகள் தோறும் குப்பைகளை அகற்ற குப்பை அள்ளும் வாகனங்கள் வரும். இது முறையாக கடைபிடிக்க ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. குப்பைகள் எடுக்க துப்புரவு பணியாளர்கள் வரவில்லை என்றால் நகராட்சி அலுவலகம் மற்றும் சுகாதார அலுவலர், ஆய்வாளர்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்