வெளிநாட்டில் ஏற்பட்ட முன்விரோதம் வாலிபரை கொலை செய்ய முயன்ற 5 பேர் கைது
வெளிநாட்டில் ஏற்பட்ட முன்விரோதத்தில் வாலிபரை கூலியாட்கள் வைத்து கொலை செய்ய முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர். அதில் கஞ்சா விற்ற சிறுவனும் சிக்கினான்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை சேர்ந்தவர் சிவா (வயது 27). இவரை கடந்த 25–ந்தேதி ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியது. அதில் பலத்த காயம் அடைந்த அவர் தீவிர சிகிச்சைக்கு பின்பு உயிர் பிழைத்தார். இதுதொடர்பாக காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் மோகன், சப்–இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.
அதில் காளையார்கோவிலை சேர்ந்த ஆனந்தன் (30) என்பவர் தலைமையில் ஒரு கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் ஆனந்தனை கைது செய்து விசாரணை செய்தனர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. வெட்டபட்ட சிவா கடந்த சில வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் வேலை பார்த்துள்ளார். அப்போது அங்கு வேலை செய்த மதுரையை சேர்ந்த புஷ்பராஜ் என்பவருக்கும், சிவாவிற்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தெடர்பாக முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இருவரும் அடிக்கடி தகராறு செய்து கொண்டனராம். இந்தநிலையில் இதுபற்றி அறிந்த புஷ்பராஜின் தம்பி தேவா என்பவர் பணம் கொடுத்து கூலிப்படை மூலம் சிவாவை வெட்டி கொலை செய்ய முயன்றது தெரிந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சிவகங்கையை சேர்ந்தபாண்டியன் (34), சையதுஇப்ராகிம்(24), சிவன் (34), மற்றும் காளையார்கோவிலை சேர்ந்த பாபு (28) ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆனந்தன் உள்ளிட்ட 5 பேர்களும் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள தேவாவை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த வழக்கில் முதன் முதலில் பிடிபட்ட ஆனந்தனிடம் போலீசார் விசாரணை செய்த போது அவர் கஞ்சா பயன்படுத்தியிருப்பது தெரிந்தது. அவரிடம் இதுகுறித்து விசாரித்த போது சிவகங்கை அருகே உள்ள பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் கஞ்சா விற்றது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் கஞ்சா விற்ற சிறுவனையும் கைது செய்தனர். சிறுவன் நெல்லையில் உள்ள ஒரு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளான்.