33 ஆயிரம் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்: மும்பையில் பஸ் போக்குவரத்து முடங்கியது பயணிகள் பரிதவிப்பு

பெஸ்ட் ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் காரணமாக மும்பையில் பஸ் போக்குவரத்து முடங்கியது. இதனால் பயணிகள் கடும் பரிதவிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

Update: 2019-01-09 00:00 GMT
மும்பை,

மும்பை பெருநகரத்தில் ‘பெஸ்ட் பஸ்கள்' புறநகர் மின்சார ரெயில் சேவைக்கு அடுத்து இரண்டாவது மிகப்பெரிய போக்கு வரத்து சேவையாக விளங்குகின்றன.

வேலைநிறுத்தம்

மும்பை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பெஸ்ட் குழுமம் 27 டெப்போக்களில் இருந்து 3,300-க்கும் மேற்பட்ட பஸ்களை பல்வேறு வழித்தடங்களில் இயக்கி வருகிறது. இந்த பஸ் சேவைகளை சுமார் 30 லட்சம் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் பெஸ்ட் பஸ்கள் நஷ்டத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பெஸ்ட் குழுமம் ஊழியர்களுக்கு மாத சம்பளம் கொடுப்பதற்கு கூட சிரமத்தை சந்தித்து வருகிறது.

எனவே நஷ்டத்தில் இயங்கி வரும் பெஸ்ட் குழுமத்தை மாநகராட்சியுடன் இணைத்து பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும், சம்பள உயர்வு, கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட தீபாவளி போனசை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 7-ந் தேதி நள்ளிரவு முதல் பெஸ்ட் ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக எச்சரித்து இருந்தனர்.

கோர்ட்டு தடை

பெஸ்ட் ஊழியர் யூனியன் சங்க பிரதிநிதிகளுடன் பெஸ்ட் குழும பொதுமேலாளர் சுரேந்திரகுமார் பாக்டே பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து, பெஸ்ட் குழும நிர்வாகம் பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை தடுப்பதற்காக தொழிற்சாலை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, பெஸ்ட் ஊழியர்களின் வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என கூறி தடை விதித்தது.

பஸ் சேவை முடங்கியது

இருப்பினும் கோர்ட்டு உத்தரவு நகல் ஏதும் தங்களுக்கு கிடைக்கவில்லை என பெஸ்ட் ஊழியர்கள் யூனியன் தெரிவித்தது. அவர்கள் அறிவித்ததுபடி நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் குதித்தனர்.

பெஸ்ட் பஸ் ஊழியர்கள் சுமார் 33 ஆயிரம் பேர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவே பஸ்கள் டெப்போக்களில் நிறுத்தப்பட்டன.

டெப்போக்களின் நுழைவு வாயில் கேட்டுகள் இழுத்து மூடப்பட்டு பூட்டு போடப்பட்டன. வேலைநிறுத்தம் காரணமாக மும்பை பெருநகரத்தில் பெஸ்ட் பஸ் சேவை முற்றிலும் முடங்கியது. பஸ் நிறுத்தங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

பயணிகள் பரிதவிப்பு

நேற்று காலை பஸ் சேவை இன்றி வேலைக்கு செல்வோர் உள்பட பெஸ்ட் பஸ்களை நம்பியிருந்த பயணிகள் கடும் பரிதவிப்புக்கு உள்ளாகினார்கள். தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்வதற்காக டாக்சி மற்றும் ஆட்டோ நிறுத்தங்களில் குவிந்தனர்.

இதனால் அங்கு பயணிகள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் கால் கடுக்க நின்று ஆட்டோ மற்றும் டாக்சிகளை பிடித்து சென்றனர்.

இதனால் பயணிகள் கடும் அதிருப்திக்கு உள்ளானார்கள். காட்கோபரில் இருந்து முல்லுண்டுக்கு தினசரி பெஸ்ட் பஸ்சில் பணிக்கு செல்லும் அனிதா நாயக் என்ற பயணி தெரிவிக்கையில், பெஸ்ட் குழும நிர்வாகத்துக்கும், பெஸ்ட் ஊழியர்களுக்கும் இடையிலான பிரச்சினையில் பாதிக்கப்பட்டு இருப்பது பயணிகள் தான். பெஸ்ட் நிர்வாகத்துக்கும், ஊழியர்களுக்கும் நாங்கள் என்ன தவறு செய்தோம். எங்களை ஏன் துன்பப்படுத்துகிறார்கள்? என்றார்.

எச்சரிக்கை

இதற்கிடையே பெஸ்ட் குழும நிர்வாகம், வேலை நிறுத்தத்தில் பங்கேற்று உள்ள பஸ் ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். இல்லையெனில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றறிக்கை அனுப்பியது.

மேலும் பணிக்கு திரும்பாத ஊழியர்கள் மீது ‘மெஸ்மா’ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து உள்ளது.

பெஸ்ட் பஸ் இயக்கப்படாததால் மின்சார ரெயில்களில் கூட்டம் அலைமோதியது. எனினும் மத்திய, மேற்கு ரெயில்வேக்கள் சார்பில் கூடுதல் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன. மேலும் அரசு போக்குவரத்து கழகம் சார்பிலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

மேலும் செய்திகள்