நாக்பூரில் ருசிகரம் ‘‘திருடிய இதயத்தை கண்டுபிடித்து தாருங்கள்’’ வாலிபர் போலீசில் புகார்
‘‘திருடிய இதயத்தை கண்டுபிடித்து தாருங்கள்’’ என வாலிபர் போலீசில் புகார் அளிக்க வந்த ருசிகர சம்பவம் நாக்பூரில் நடந்துள்ளது.
நாக்பூர்,
‘திருடிய இதயத்தை திரும்ப கொடுத்துவிடு காதலா’ என காதலி உருகி பாடும் பாடல்களையும் கேட்டிருப்போம்.
ஆனால் திருடிய இதயத்தை கண்டுபிடிக்க கோரி போலீசுக்கு புகார் வந்ததாக யாரும் கேள்விப்பட்டு இருக்க மாட்டோம். இப்படி ஒரு சம்பவம் நாக்பூரில் நடந்துள்ளது.
சமீபத்தில் நாக்பூரில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு வந்த வாலிபர் ஒருவர், தனது இதயத்தை பெண் ஒருத்தி திருடிவிட்டதாகவும், அந்த இதயத்தை கண்டுபிடித்து தருமாறும் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
முதலில் வாலிபர் ஏதோ நகைச்சுவை செய்வதாக கருதிய போலீசார், அவர் விடாப்பிடியாக தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
வழக்குப்பதிவு செய்தே தீரவேண்டும் என்று வாலிபர் அடம் பிடித்ததால், அவரை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் உயர் அதிகாரியிடம் அனுப்பி வைத்தனர்.
சட்டப்பிரிவு இல்லை
உயர் அதிகாரி அந்த வாலிபரிடம் அவரின் பிரச்சினைகளை பொறுமையாக கேட்டுக்கொண்டார். பின்னர் வாலிபர் கூறும் பிரச்சினை குறித்து வழக்குப்பதிவு செய்ய இந்திய சட்டத்தில் எந்த பிரிவும் இல்லை என்று கூறி அவரை ஒருவழியாக சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பினார்.
திருடுபோன பொருட்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நாக்பூரில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நாக்பூர் போலீஸ் கமிஷனர் புஷண் குமார் உபாத்யாய் இந்த ருசிகர சம்பவத்தை அங்கு வந்தவர்களிடம் பகிர்ந்துகொண்டார்.
மேலும் அவர் கூறுகையில், “நாங்கள் திருட்டுபோன பொருட்களை மீட்டு உங்களிடம் ஒப்படைக்கிறோம். சில நேரம் தீர்க்க முடியாத இதுபோன்ற விசித்திர வழக்குகளும் எங்களை தேடி வருகின்றன” என்றார்.