தாராபுரம்–காங்கேயத்தில் அனைத்துத்துறை அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தாராபுரம்,காங்கேயத்தில் அனைத்து அரசு ஊழியர் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தாராபுரம்,
தாராபுரத்தில் அனைத்துத்துறை ஊழியர்களின், அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தையொட்டி, தலைமை தபால் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்கத்தின் வட்டக்கிளைத் தலைவர் ராஜு தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத் தலைவர் சேக்முகமது, தபால்துறை ஊழியர் சங்கத்தின் வட்டகிளைச் செயலாளர் பாரதி, சி.ஐ.டி.யு சங்கத்தின் செயலாளர் பொன்னுசாமி, தொலை தொடர்புத் துறை ஊழியர் சங்கத்தின் செயலாளர் நாச்சிமுத்து, காப்பீட்டுத்துறை ஊழியர் சங்கத்தின் செயலாளர் திருமலைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது ஒப்பந்த தினக்கூலி மற்றும் புற ஆதார முறையில் பணியாற்றும் ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிகளை வரன்முறைப்படுத்தி, அனைத்து காலிப்பணியிடங்களையும் சட்டபூர்வ நியமன விதிகளின் கீழ் நிரப்ப வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த, அத்தியாவசிய பொருட்கள், ஊரக வணிகம் மூலம் விற்பனை செய்வதை தடை செய்து, பொது விநியோக முறையை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலையில்லா திண்டாட்டத்தை கட்டுப்படுத்த, உறுதியான நடவடிக்கைகள் மூலம், வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். தவிர்த்தல், விலக்களித்தல் ஏதுமின்றி அனைத்து அடிப்படை தொழிலாளர் நலச் சட்டங்களையும் அமுல்படுத்த வேண்டும். தொழிலாளர் நலச் சட்டங்களை மீறுவோர் மீது, கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
காங்கேயம் அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து காங்கேயத்தில் நேற்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அகில இந்திய வேலை நிறுத்தம் காரணமாக நேற்று காங்கேயத்தில் பொதுத்துறை வங்கிகள், தபால் ஆபீஸ் மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் பணிகள் பாதிக்கப்பட்டது இந்த வேலை நிறுத்தத்திற்கு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழு ஆதரவு தெரிவித்துள்ளது.
இதன்படி காங்கேயத்தில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுசுகாதாரத்துறை, அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள் பெரும்பாலானவர்கள் பணிக்கு செல்லவில்லை.ஆனால் அரசு பள்ளி ஆசிரியர்கள் பெரும்பாலும் பணிக்கு சென்றுவிட்டனர். இருப்பினும் தமிழ்நாடு அரசு அலுவலங்களில் பணிகள் பாதிக்கப்பட்டது. மேலும் இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து காங்கேயம் வட்டகிளை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் காங்கேயம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்டக்கிளை தலைவர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். இதில் தமிழக அரசின் பல்வேறு துறை ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.