அரசு பஸ் –மோட்டார் சைக்கிள் மோதல்: மனைவி கண்எதிரே கணவர் சாவு புஞ்சைபுளியம்பட்டி அருகே பரிதாபம்

புஞ்சைபுளியம்பட்டி அருகே அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் மனைவி கண்எதிரே கணவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-01-08 22:15 GMT

புஞ்சைபுளியம்பட்டி,

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பசூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 27). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி ஜீவிதா. இவர்களுக்கு ரிதன்யா என்ற மகளும், யுகேஸ் என்ற மகனும் உள்ளனர். இந்தநிலையில் நேற்று மாலை ஆனந்தராஜ் தன்னுடைய மனைவியை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி நோக்கி வந்து கொண்டு இருந்தார்.

புஞ்சைபுளியம்பட்டி அருகே புளிம்பட்டி கோவை ரோட்டில் சென்றபோது, எதிரே சத்தியமங்கலத்தில் இருந்து கோவை நோக்கி வந்த அரசு பஸ்சும், ஆனந்தராஜ் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர்.

இதில் ஆனந்தராஜூக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மனைவி கண்எதிரே பரிதாபமாக இறந்தார். மேலும் விபத்தில் ஜீவிதாவும் படுகாயம் அடைந்தார். இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த ஜீவிதாவை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

மேலும் இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விபத்தில் இறந்த ஆனந்தராஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்