அரசு ஊழியர்கள் போராட்டம்: தமிழக–கர்நாடக பஸ் போக்குவரத்து நிறுத்தம்
அரசு ஊழியர்கள் போராட்டம் காரணமாக தமிழ்நாடு, கர்நாடகா இடையே இருமாநில பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
சத்தியமங்கலம்,
அனைத்து அரசு ஊழியர்கள், தொழிற்சங்கங்கள் சார்பில் நாடுதழுவிய 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியுள்ளது. இதனால் அனைத்து இடங்களிலும் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்தந்த தாலுகா அலுவலகங்கள் முன்பு அரசு ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டமும் நடத்தினார்கள். இந்த போராட்டம் காரணமாக சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதை வழியாக தமிழக–கர்நாடகா இடையே பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நாள் தோறும் 15–க்கும் மேற்பட்ட கர்நாடக அரசு பஸ்கள் சத்தியமங்கலம் வந்து செல்கின்றன. இந்த பஸ்கள் அனைத்தும் நேற்று வராததால், சத்தியமங்கலம் பஸ்நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
இதனால் பெங்களூர், மைசூர் மற்றும் தாளவாடி மலைக்கிராம பகுதிகளுக்கும், தமிழகத்தின் எல்லை புற கிராமங்களுக்கும் செல்லவேண்டிய பயணிகள் சத்தியமங்கலம் பஸ்நிலையத்திலேயே பரிதவித்தார்கள். ஒருசிலர் ஒன்று சேர்ந்து சரக்கு ஆட்டோ, வேன்களை வாடகைக்கு அமர்த்தி பயணித்தார்கள்.
இதேபோல் கோவை, திருப்பூர், ஈரோட்டில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் தமிழக அரசு பஸ்களும் கர்நாடகத்துக்கு இயக்கப்படவில்லை. தலமலை வழியாக தாளவாடி வரை மட்டுமே சென்றன.