ஈரோடு மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது; வங்கிகள் வெறிச்சோடின, ரூ.600 கோடி வர்த்தகம் பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் அரசு ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. வங்கிகள் வெறிச்சோடியதால் ரூ.600 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

Update: 2019-01-08 23:30 GMT

ஈரோடு,

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தொழிலாளர் சட்டங்களை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும். குறைந்த பட்ச கூலியாக மாதம் ரூ.18 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும். மத்திய–மாநில பொதுத்துறைகளின் பங்கு விற்பனைகளை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று மத்திய அரசு ஊழியர்கள் அறிவித்து இருந்தனர். இந்த போராட்டம் நேற்று தொடங்கியது.

ஈரோடு மாவட்டத்திலும் மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அனைத்து தபால் நிலையங்களும் அடைக்கப்பட்டன. அங்கு ஊழியர்கள் யாரும் பணிக்கு வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் எல்.ஐ.சி. அலுவலகம் உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன.

ஈரோடு மாவட்டத்தில் வங்கி ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்தியன் வங்கிகள், ஸ்டேட் வங்கிகள், கனரா வங்கிகள் உள்பட பல்வேறு வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

வங்கி ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு கனரா வங்கி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு ஈரோடு மாவட்ட வங்கி ஊழியர் சங்க தலைவர் வி.பாக்கியகுமார் தலைமை தாங்கினார். இதில் சங்க நிர்வாகிகள் ரமேஷ்குமார், கோபாலகிருஷ்ணன், கதிரவன், உஷா மகேஸ்வரி உள்பட வங்கி ஊழியர்கள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

இதுகுறித்து சங்க செயலாளர் எஸ்.சூரியநாராயணன் கூறியதாவது:–

சம வேலைக்கு சம ஊதியம் என்பதை உறுதிபடுத்த வேண்டும். பொதுத்துறைகளை தனியார் மயமாக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும். வங்கிகளில் உள்ள வராக்கடன்களை முழுமையாக வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் சுமார் 5 லட்சம் பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் 220 பெண்கள் உள்பட மொத்தம் 650 ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். இதில் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் உள்பட 200–க்கும் மேற்பட்ட வங்கிகள் மூடப்பட்டன. இதனால் சுமார் ரூ.600 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அரசு ஊழியர்கள் நடத்தும் போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும் ஆதரவு தெரிவித்து உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஊழியர்கள் வேலைக்கு செல்லாததால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகம் முன்பும் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்படி ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க ஈரோடு வட்டக்கிளை தலைவர் ரங்கசாமி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் உஷாராணி பேசினார். இதில் வட்டக்கிளை செயலாளர் சிவக்குமார் உள்பட அரசு ஊழியர்கள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

இதுகுறித்து சங்கத்தின் மாவட்ட தலைவர் பாஸ்கர்பாபு கூறியதாவது:–

வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வணிக வரித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்பட மொத்தம் 26 துறைகளை சேர்ந்த ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் அடைக்கப்பட்டன. ஈரோடு மாவட்டத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தினால் ஈரோட்டில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், மினிபஸ்கள் வழக்கம்போல் ஓடின. அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு இருந்தன. சில தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சூரம்பட்டி, பன்னீர்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு உள்ளிட்ட பகுதிகளில் சில ஆட்டோக்கள் ஓடவில்லை.

அசம்பாவித சம்பவம் ஏற்படுவதை தடுக்க ஈரோடு மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஈரோடு பஸ் நிலையத்தில் போலீசார் தொடர்ந்து ரோந்து சுற்றி வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மத்திய–மாநில அரசு, ஆசிரியர் மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் கூட்டமைப்பு சார்பில் ஈரோடு காளைமாட்டு சிலை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க செயலாளர் என்.மணிபாரதி தலைமை தாங்கினார். மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு செயலாளர் மூர்த்தி, அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல அமைப்பு செயலாளர் எஸ்.ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்க செயலாளர் ராஜமாணிக்கம், தபால் ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் சங்க செயலாளர் ராமசாமி, ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் சங்க செயலாளர் நடராஜன் உள்பட ஓய்வூதியர்கள் பலர் கலந்துகொண்டு கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

இன்றும் (புதன்கிழமை) மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

மேலும் செய்திகள்