‘கடன் தள்ளுபடி’ என்ற வதந்தியால் கலெக்டர் அலுவலகத்தில் 2-வது நாளாக குவிந்த பொதுமக்கள் போலீசார் விரட்டியதால் பரபரப்பு

கலெக்டரிடம் மனு அளித்தால் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற வதந்தியின் காரணமாக புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று 2-வது நாளாக பொதுமக்கள் குவிந்தனர். இவ்வாறு வந்தவர்களை போலீசார் விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-01-08 23:00 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி கஜா புயல் தாக்கியது. இதில் ஏராளமான மின்கம்பங்கள், மரங்கள் போன்றவை சாய்ந்தன. மேலும் குடிசை, ஓட்டு வீடுகள் உள்ளிட்டவை சேதமடைந்ததால், பொதுமக்கள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களை சேர்ந்த சிலர் தங்கள் தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் வாங்கிய கடனை செலுத்த காலஅவகாசம் வழங்க உத்தரவிட வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதையடுத்து கலெக்டர் கணேஷ் மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் வாங்கிய கடன்களை செலுத்த கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில் நகைக்கடன் மற்றும் விவசாய கடன், மகளிர் சுயஉதவிக்குழு கடன்கள் பெற்றவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் உரிய முறையில் மனு அளித்தால் அவர்களது கடன் தள்ளுபடி செய்யப்படும் என புதுக்கோட்டை மாவட்ட பொதுமக்கள் மத்தியில் ஒரு வதந்தி கிளம்பியது. இதை நம்பி நேற்று முன்தினம் ஏராளமான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர்.

இந்நிலையில் நேற்று 2-வது நாளாக காலையில் இருந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக பொதுமக்கள் குவிந்தனர். இதனால் கலெக்டர் அலுவலக பகுதியில் நேற்றும் மக்கள் கூட்டம் அலை மோதியது. இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள சாலை, பி.எல்.ஏ. ரவுண்டானா உள்ளிட்ட பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போக்குவரத்து போலீசார் வாகனங்களை மாற்றுப்பாதையில் அனுப்பி வைத்தனர். மேலும் தொடர்ந்து போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே நின்று கொண்டு போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் நேற்று கலெக்டர் அலுவலக பகுதி காலையில் இருந்து மதியம் வரை பரபரப்பாக காணப்பட்டது.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையிலான துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம், இன்ஸ்பெக்டர்கள் வாசுதேவன், கருணாகரன் மற்றும் போலீசார் மனு கொடுக்க வந்தவர்களை கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு தடுப்பு கட்டைகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். பின்னர் மனு கொடுத்தால் கடன் தள்ளுபடி என்பது வதந்திதான். எனவே இதை நம்பி யாரும் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வர வேண்டாம் என அறிவுரை கூறி, அனுப்பி வைத்தனர்.

இருப்பினும் பொதுமக்கள் கலைந்து செல்லாமல் கலெக்டர் அலுவலகம் பகுதியில் ஆங்காங்கே திரண்டு நின்று கொண்டிருந்தனர். இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலெக்டர் அலுவலகம் எதிரே, பி.எல்.ஏ. ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே திரண்டு நின்று கொண்டிருந்தவர்களை விரட்டினர். இந்த சம்பவத்தால் நேற்று கலெக்டர் அலுவலக பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்