சேலம்-எழும்பூர் ரெயில் நீட்டிப்புக்கு எதிர்ப்பு ரெயில்வே கோட்ட அலுவலகத்தை பா.ம.க.வினர் முற்றுகை போலீசாருடன் தள்ளுமுள்ளால் பரபரப்பு
சேலம்-எழும்பூர் ரெயில் கரூர் வரை நீட்டிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ரெயில்வே கோட்ட அலுவலகத்தை பா.ம.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
சேலத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலை தற்போது கரூரில் இருந்து சேலம் வழியாக சென்னைக்கு இயக்க ரெயில்வே நிர்வாகத்தினர் முயற்சி மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த முயற்சியை கண்டித்து நேற்று பா.ம.க. சார்பில் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகை போராட்டம் நடந்தது. இதற்கு மாநில துணைப் பொதுச்செயலாளர் அருள் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் கதிர்ராசரத்தினம், சாம்ராஜ், பசுமை தாயக மாநில இணை செயலாளர் சத்ரியசேகர், மாவட்ட துணை செயலாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட தலைவர் ஆறுமுகம், மாநில அமைப்பு செயலாளர் சரவணன், பகுதி செயலாளர்கள் தில்லைராஜா, சிவா, நிர்வாகி எழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின் போது பா.ம.க.வினர் ரெயில்வே கோட்ட அலுவலகத்தில் நுழைய முற்பட்டனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆனால் பா.ம.க.வினர் தடுப்புகளை தள்ளி முற்றுகையிட முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் போலீசாரின் அனுமதியுடன் ரெயில்வே கோட்டத்திற்குள் சென்று ரெயில்வே மேலாளரிடம் பா.ம.க.வினர் மனு அளித்தனர்.
இதுகுறித்து பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் அருள் நிருபர்களிடம் கூறியதாவது:-
சேலம்-எழும்பூர் ரெயிலை கரூர் வரை நீட்டிப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. கரூர், நாமக்கல், ராசிபுரம் வழித்தடங்களுக்கு புதிய ரெயிலை விட வேண்டும். இதனால் ரெயில்வே நிர்வாகம் நல்ல வருமானம் ஈட்டும்.
சேலத்தை சேர்ந்த பொதுமக்கள் சேலம்-எழும்பூர் ரெயில் முன்பதிவில்லாத பயணிகள் பெட்டியில் சேலத்தில் இருந்து செல்லும் போதே கூட்டம் கூடுதலாக இருக்கும். கரூரில் இருந்து இயக்கும் போது, முன்பதிவில்லாத பயணிகள் பெட்டியில் கூட்டம் நிரம்பி விடும் என்பதால் சேலத்து மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
ரெயில் நீட்டிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சி பேதமின்றி சேலத்து மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி சேலம் ரெயில்வே கோட்டத்தில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்களையும் செல்லவிடாமல் தடுத்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.