தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம், விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு பஸ்கள் ஓடவில்லை

தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு பஸ்கள் ஓடவில்லை.

Update: 2019-01-08 22:45 GMT
விழுப்புரம்,

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிற்சங்க உரிமையை பறிக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்களின் சார்பில் நேற்று நாடு முழுவதும் வேலை நிறுத்தம் நடைபெற்றது. புதுச்சேரி மாநிலத்தில் மட்டும் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்தின் காரணமாக அங்கு பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் பஸ்கள், ஆட்டோக்கள், வேன்கள், லாரிகள் ஓடவில்லை. பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது.

இந்த போராட்டத்தின் எதிரொலியாக விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு அரசு பஸ்கள் இயக்கப்படாமல் விழுப்புரம் மாவட்ட எல்லையின் அருகில் உள்ள மதகடிப்பட்டு, பட்டானூர், சின்னகோட்டக்குப்பம் வரை பஸ்கள் இயக்கப்பட்டன. அதுவும் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது.

அதேபோல் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் பஸ்கள் இயக்கப்படாமல் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனால் தனியார் பஸ்கள், விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திலேயே வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை காண முடிந்தது.

இதுபோல் திண்டிவனம், செஞ்சி, விக்கிரவாண்டி, கண்டமங்கலம், திருக்கோவிலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் நேற்று புதுச்சேரி மாநிலத்திற்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

மேலும் செய்திகள்