வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி நாகையில், தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி நாகையில் பல்வேறு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-01-08 23:00 GMT
நாகப்பட்டினம்,

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி நாகை புதிய பஸ் நிலையம் அருகே அவுரித்திடலில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு போக்குவரத்து சம்மேளன குழு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சிவக்குமார், சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் ஜீவா, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒப்பந்த, தினக்கூலி மற்றும் புற ஆதார முறையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிகளை வரன் முறைப்படுத்தி, அனைத்து காலிப்பணியிடங்களையும் சட்டபூர்வ நியமன விதிகளின் படி நிரப்ப வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.

வேலையில்லாத திண்டாட்டத்தை கட்டுப்படுத்த, உறுதியான நடவடிக்கைகள் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். தொழிலாளர் நல சட்டங்களை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைவருக்கும் குறைந்த பட்ச மாத ஊதியம் ரூ.18 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும். ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

இதில் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம், இருசக்கர வாகனம் பழுதுபார்ப்போர் முன்னேற்ற சங்கம், லாரி உரிமையாளர் சங்கம், மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம், கால்டாக்சி தொழிலாளர்கள் சங்கம் உள்பட பல்வேறு சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

அதேபோல மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை தலைமை தபால் நிலையம் முன்பு தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்க கிளை செயலாளர் விஜயராகவன் தலைமை தாங்கினார். இதில் அஞ்சல் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

வேலை நிறுத்த போராட்டம் காரணமாக நாகையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம், வருமான வரித்துறை அலுவலகம், தலைமை தபால் நிலையம் ஆகியவை மூடப்பட்டு இருந்தன.

இதை தொடர்ந்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்பட ஒரு சில வங்கிகள் மட்டுமே இயங்கின. இந்தியன் வங்கி உள்பட பல்வேறு வங்கிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. இதேபோல எல்.ஐ.சி.யில் குறைந்த அளவு ஊழியர்களே பணிக்கு வந்தனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டன. 

மேலும் செய்திகள்