மாட்டு வண்டி, டிராக்டருடன் வந்தனர்: கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வலியுறுத்தி, மாட்டு வண்டி, டிராக்டருடன் வந்த விவசாயிகள் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2019-01-08 22:45 GMT
கோவில்பட்டி, 

விவசாயிகளின் இடர்பாடுகளை கருத்தில் கொண்டும், விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறாத வகையிலும், தெலுங்கானா மாநிலத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அதேபோன்று தமிழகத்திலும் அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுதோறும் ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

டிராக்டர், நெல் அறுவடை எந்திரம் போன்றவற்றுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. (சரக்கு, சேவை வரி) விதிக்க வேண்டும். தண்ணீர் பாய்ச்சும் குழாய்கள் போன்றவற்றுக்கு வரி விதிக்க கூடாது என்பதை வலியுறுத்தி, பாரதீய கிசான் சங்கத்தினர் நேற்று மாட்டு வண்டி, டிராக்டரில் வந்து கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

சங்க மாவட்ட தலைவர் வக்கீல் ரங்கநாயகலு, செயலாளர் பரமேசுவரன், ஒன்றிய தலைவர் ஜெயராமன், இளைஞர் அணி தலைவர் பொன்ராஜ், நிர்வாகிகள் கருப்பசாமி, விஜயகுமார், காளிமுத்து, ரவிச்சந்திரன், கிருஷ்ணசாமி உள்பட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

அவர்கள் மாட்டு வண்டி, டிராக்டரில் அமர்ந்தவாறே கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள், உதவி கலெக்டர் விஜயாவிடம் கோரிக்கை மனு வழங்கி விட்டு, கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்