கோவை சுகுணாபுரத்தில் அனுமதியின்றி செயல்பட்ட காப்பகத்துக்கு ‘சீல்’
கோவையில் அனுமதியின்றி செயல்பட்ட குழந்தைகள் காப்பகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. அங்கிருந்த 23 குழந்தைகள் மீட்கப்பட்டனர். இது தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை சுகுணாபுரத்தில் உள்ள பாலமுருகன் கோவில் வீதியில் ஒரு குழந்தைகள் காப்பகம் அனுமதியின்றி செயல்படுவதாக கோவை மாவட்ட குழந்தைகள் காப்பக கண்காணிப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து குழந்தைகள் நல அதிகாரி சுந்தர் தலைமையில் அந்த காப்பகத்தில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.
இதில் அந்த காப்பகம் அரசு அனுமதி பெறாமல் செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு தங்க வைக்கப்பட்டு இருந்த 23 குழந்தைகள் மீட்கப்பட்டு, உக்கடத்தில் உள்ள டான்பாஸ்கோ அன்பு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அனுமதியின்றி செயல்பட்ட அந்த காப்பகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இதுகுறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. காப்பகத்தை நடத்தி வந்த சேக்தாவூத், சிராஜுதீன், தஸ்தகீர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி காப்பகம் நடத்தக்கூடாது என்றும், அவ்வாறு காப்பகம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.