அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் தமிழ் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழ் விவசாயிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
கோவில்பட்டி,
கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் தமிழ் விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. சங்க மாநில தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் நடராஜன், மாநில துணை தலைவர் நம்பிராஜ், மாநில துணை செயலாளர் கனகராஜ், அவை தலைவர் வெங்கடசாமி உள்பட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக போதிய பருவமழை பெய்யாததால் மானாவாரி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். 60 வயது நிரம்பிய விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
படைப்புழு தாக்குதலில் சேதம் அடைந்த மக்காச்சோள பயிர்களுக்கு இழப்பீடாக அரசு அறிவித்த நிவாரணத்தொகையை பாகுபாடு இல்லாமல் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தூத்துக்குடி கிழக்கு மாவட்ட தலைவராக குருநாதன், மேற்கு மாவட்ட தலைவராக வெள்ளத்துரை, கிழக்கு மாவட்ட செயலாளராக ரவிச்சந்திரன், இளைஞர் அணி தலைவராக ஜீவானந்தம், எட்டயபுரம் தாலுகா தலைவராக பிரதீப், கோவில்பட்டி தாலுகா இளைஞர் அணி தலைவராக கவுதம் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
முன்னதாக மறைந்த சங்க நிர்வாகிகளுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.