பெரம்பலூரில் மருந்து வணிகர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில் மருந்து வணிகர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2019-01-08 23:00 GMT
பெரம்பலூர்,


இந்தியாவில் மருந்து வணிகர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் ஆன்லைன் மருந்து வணிகத்தை அனுமதிப்பதை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வலியுறுத்தி அகில இந்திய மருந்துவணிகர்கள் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் நாடு முழுவதும் மாவட்டங்கள் தோறும் ஆர்ப்பாட்டங்கள் நடத்திட அழைப்பு விடுத்திருந்தனர்.

அதன்படி சட்ட அனுமதியில்லாத ஆன்லைன் மருந்துகள் விற்பனையை தடுத்து நிறுத்திடவேண்டும். இளைஞர்களை சீரழிக்கும் போதை மருந்துகள் சுலபமாக கிடைப்பதை தடுக்க வேண்டும் மற்றும் டாக்டர்களின் மருத்துவ ஆலோசனை இன்றி மருந்துகள் பெற்றிட வழிவகுக்கும் ஆன்லைன் மருந்து வணிகத்தை எதிர்த்தும் பெரம்பலூரில் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் காந்தி சிலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.


ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். பெரம்பலூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க தலைவர் கோவிந்தராஜ், கவுரவ தலைவர் சவுகத்அலி முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் சரவணன், பொருளாளர் சிவனேசன், செந்தூர் சுகுமார், வினாயகா ராஜா, அரும்பாவூர் ராஜேஷ், ஜட்ஜ், கல்யாணி மதன், குரும்பலூர் ரமேஷ் உள்பட மொத்த மற்றும் சில்லரை மருந்துவணிகர்கள் திரளானவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி வணிகர் சங்கங்களின் பேரவை மாநில பொறுப்பாளர் சண்முகநாதன் உள்பட பலர் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து சங்க நிர்வாகிகள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்