குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த மோட்டார் சைக்கிள்

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் 100 அடி பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயங்களுடன் தம்பதி மீட்கப்பட்டனர்.

Update: 2019-01-07 22:45 GMT
குன்னூர்,

கோவை மாவட்டம் வடவள்ளியை சேர்ந்தவர் வெங்கடேஷ்(வயது 52). இவர் காந்திபுரத்தில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஹேமா(45). இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவன்-மனைவி 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். பின்னர் அங்கிருந்து கோவைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை வெங்கடேஷ் ஓட்டினார்.

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் டபுள் ரோடு அருகே திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனை தொடர்ந்து சாலையோரத்தில் உள்ள 100 அடி பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது. அதில் வெங்கடேஷ், ஹேமா ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அந்த வழியாக வந்தவர்கள் விபத்து குறித்து குன்னூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்தனர்.

பின்னர் கயிறு கட்டி பள்ளத்தில் படுகாயங்களுடன் கிடந்த வெங்கடேஷ், ஹேமா ஆகியோரை மீட்டு, குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு 2 பேரும் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வெலிங்டன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்