கள்ளக்காதலி கொலை வழக்கில் கைதான வாலிபர் சேலம் சிறையில் அடைப்பு
கள்ளக்காதலி கொலை வழக்கில் கைதான வாலிபரை போலீசார் சேலம் சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்தவர் செல்வி (வயது 32). இவருக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக செல்வியும், அவரது கணவரும் பிரிந்து விட்டனர். மேலும் விவகாரத்து செய்து கொண்டனர். செல்வி கிருஷ்ணகிரியில் ஜக்கப்பன் நகர் பகுதியில் உள்ள ஒரு பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் அவருக்கும் காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த தவுலத் (24) என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. நேற்று முன்தினம் மதியம் கடையில் செல்வி இருந்த போது தவுலத் அங்கு சென்றார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் ஆத்திரம் அடைந்த தவுலத் அருகில் இருந்த கத்தியால் செல்வியை குத்திக்கொலை செய்தார்.
பின்னர் அவர் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் சரண் அடைந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தவுலத்தை கைது செய்தனர். கைதான தவுலத் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் தனக்கும், செல்விக்கும் இடையே 2 ஆண்டுகளாக பழக்கம் இருந்ததாகவும், அவர் வேறு ஒருவருடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததை தட்டிக் கேட்ட போது ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்திக்கொலை செய்து விட்டதாகவும் கூறினார்.
இதையடுத்து கள்ளக்காதலி கொலை வழக்கில் கைதான தவுலத்தை போலீசார் கிருஷ்ணகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.