கூடலூரில் கடும் பனிப்பொழிவு: தேயிலை தோட்டங்களில் விசைத்தெளிப்பான் நீர்பாசனம்

கூடலூரில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. செடிகள் கருகாமல் பாதுகாக்க தேயிலை தோட்டங்களில் விசைத்தெளிப்பான் நீர்பாசனம் செய்யப்படுகிறது.

Update: 2019-01-06 22:45 GMT
கூடலூர்,

நீலகிரி மாவட்டத்தில் இரவில் கடும் பனிப்பொழிவும், பகலில் வெயிலும் காணப்படுகிறது. வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால், பணப்பயிராக விளங்கும் குறுமிளகு விளைச்சல் அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் போதிய வருவாய் இன்றி விவசாயிகள் உள்ளனர். மேலும் மழைக்காலத்தில் தேயிலை மகசூல் இருந்தும் போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் கூடலூர் பகுதியில் பகலில் நன்கு வெயில் காணப்படுகிறது. மேலும் வடகிழக்கு பருவமழை பெய்யாமல் போனதால் வழக்கத்துக்கு மாறாக வறட்சியான காலநிலை முன்கூட்டியே நிலவுகிறது. கடந்த காலங்களில் பிப்ரவரி மாத இறுதியில் கோடை வறட்சி தொடங்கும். ஆனால் தற்போதே நீர்நிலைகளும் வறண்டு விட்டன.

இதனால் விவசாய பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக தேயிலை தோட்டங்களில் போதிய ஈரப்பதம் இல்லாததால் பசுந்தேயிலை மகசூல் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் இரவில் கடும் பனிப்பொழிவும், பகலில் நன்கு வெயிலும் காணப்படுகிறது. இதனால் தேயிலை தோட்டங்களில் மகசூல் பாதிக்காமலும், செடிகள் கருகாமலும் இருக்க விசைத்தெளிப்பான்(ஸ்பிரிங்லர்) மூலம் நீர்பாசனம் செய்யும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

இருப்பினும் சிறு தேயிலை விவசாயிகளுக்கு விசைத்தெளிப்பான் மூலம் நீர் பாசன வசதி சாத்தியம் இல்லாததால், அவர்களுக்கு பசுந்தேயிலை மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அரவை தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை வரத்து குறைய தொடங்கி உள்ளது.

இதுகுறித்து விவசாயிகள்கூறியதாவது:-பசுந்தேயிலைக்கு ஏற்கனவே போதிய விலை கிடைப்பது இல்லை. இதனால் பெரும்பாலான தோட்டங்கள் பராமரிப்பின்றி விடப்பட்டுள்ளது. இதனிடையே வடகிழக்கு பருவமழை பொய்ப்பு, நோய் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் குறுமிளகு விளைச்சலும் அடியோடு பாதித்துள்ளது.

இதனால் பொருளாதார நிலையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் விவசாயம் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே குறுமிளகு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்