கர்நாடக கூட்டணி அரசில் ஊழல் தாண்டவமாடுகிறது எடியூரப்பா குற்றச்சாட்டு

கர்நாடக கூட்டணி அரசில் ஊழல் தாண்டவமாடுகிறது என்று எடியூரப்பா குற்றம்சாட்டினார்.

Update: 2019-01-06 21:30 GMT
பெங்களூரு,

கர்நாடக கூட்டணி அரசில் ஊழல் தாண்டவமாடுகிறது என்று எடியூரப்பா குற்றம்சாட்டினார்.

கா்நாடக பா.ஜனதா தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடியூரப்பா தார்வாரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஊழல் தாண்டவமாடுகிறது

கர்நாடக கூட்டணி அரசில் ஊழல் தாண்டவமாடுகிறது. இதற்கு விதானசவுதா சாட்சியாக இருப்பது துரதிர்ஷ்டம். விதான சவுதாவில் மந்திரி புட்டரங்கஷெட்டியின் உதவியாளர் ரூ.25 லட்சத்தை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்றுள்ளார்.

இதுபற்றி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள மந்திரி புட்டரங்கஷெட்டி உடனே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இந்த அரசு கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறது. ஊழல் புகாருக்கு ஆளாகியுள்ள மந்திரி மீது நடவடிக்கை எடுக்காமல், அவரை பாதுகாக்கும் முயற்சியில் மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் இறங்கி இருப்பது சரியல்ல.

கடும் வறட்சி

மாநிலத்தில் வளர்ச்சி பணிகளே நடக்கவில்லை. ஊழல், அதிகாரிகள் பணி இடமாற்றம் இவை தான் நடக்கிறது. கூட்டணி கட்சிகள் இடையே ஒற்றுமை இல்லாததால், ஆட்சி நிர்வாகம் பாதிக்கப்பட்டுள்ளது.

156 தாலுகாக்களில் கடும் வறட்சி நிலவுகிறது. ஆனால் அந்த பகுதிகளில் நிவாரண பணிகள் நடைபெறவில்லை. கிராமப்புற வேலை உறுதி திட்டம் சரியான முறையில் அமல்படுத்தப்படவில்லை.

குடிநீர் இல்லை

இதன் காரணமாக மக்கள் வயிற்றுப் பிழைப்புக்காக வேலை தேடி வெளி மாநிலங்களுக்கு செல்கிறார்கள். மக்களுக்கு குடிநீர் இல்லை. கால்நடைகளுக்கும் நீர் கிடைக்கவில்லை. இத்தகைய நேரத்தில் பெட்ரோல்-டீசல் மீதான வரியை முதல்-மந்திரி உயர்த்தியுள்ளார்.

முதல்-மந்திரி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மாநிலத்தில் கனிம சுரங்க முறைகேடுகள் நடக்கின்றன. மாநில அரசு இதை தடுக்கவில்லை. இதற்கு எதிராக பா.ஜனதா போராட்டம் நடத்தும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

வெட்கக்கேடானது

கர்நாடக பா.ஜனதா பொதுச் செயலாளர் சி.டி.ரவி கூறுகையில், “ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள மந்திரியின் செயல்பாட்டை நியாயப்படுத்தும் வகையில் காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் பேசி இருக்கிறார். இது வெட்கக்கேடானது. காங்கிரசுக்கு என்ன கொள்கை உள்ளது?” என்றார்.

மேலும் செய்திகள்