ஒரு மாத ஊதியத்தை பொங்கல் போனசாக வழங்க வேண்டும்; சத்துணவு ஊழியர் சங்கம் கோரிக்கை
சத்துணவு ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை பொங்கல் போனசாக வழங்க வேண்டும் என்று சத்துணவு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் சிவகங்கையில் மாவட்டத் தலைவர் கண்ணுச்சாமி தலைமையிலும் செயலாளர் சீமைச்சாமி முன்னிலையில் நடந்தது. மாநில துணைத் தலைவர் பாண்டி, மாவட்ட நிர்வாகிகள் முத்துக்குமார், பாண்டி, கண்ணன், கருப்பையா, பாலசுப்ரமணியன்உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.
கூட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் காலிபணியிடங்களை நிரப்பாததால் பணிப்பளு உள்ளது. எனவே உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணியிட மாறுதல்வழங்க வேண்டும். பதவி உயர்வு வழங்க வேண்டும். வாரிசு பணியை தாமதம் இன்றி வழங்க வேண்டும். மாத முதல் தேதியில் ஓய்வூதியம், முன்மானியம் போன்றவற்றை செயல்படுத்த வேண்டும்.
அமைப்பாளர், சமையலர், உதவியாளர் இல்லாத மையங்களில் தற்காலிக ஊழியர்களை நியமிக்க வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். ஒரு மாத ஊதியத்தை பொங்கல் போனசாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் பானுமதி நன்றி கூறினார்.