அமைச்சர் மணிகண்டன் பொங்கல் பரிசு வழங்கினார்

மாவட்டத்தில் சுமார் 3 லட்சத்து 60 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை அமைச்சர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்.

Update: 2019-01-06 22:15 GMT
பரமக்குடி,

பரமக்குடியில் உள்ள பாரதிநகர், மேல பள்ளிவாசல் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. கலெக்டர் வீரராகவ ராவ் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் முருகேசன், முன்னாள் அமைச்சர் டாக்டர் சுந்தரராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் ஜமால் வரவேற்று பேசினார். இதில் அமைச்சர் மணிகண்டன் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்.

விழாவில் அவர் பேசியதாவது:- பொங்கல் பரிசு வழங்குவதில் முறைகேடுகள் நடக்காத வண்ணம் வெளிப்படையாகவே குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்க வேண்டும். மாவட்டம் முழுவதும் 3 லட்சத்து 60 ஆயிரத்து 211 குடும்ப அட்டைதாரர்களுக்கு 775 கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு உள்ளாட்சி தேர்தல் கண்டிப்பாக வந்துவிடும். பள்ளத்தில் கிடக்கும் மக்களை தூக்கிவிடும் அரசாக அ.தி.மு.க அரசு உள்ளது. திருவாரூர் இடைத்தேர்தல் நடந்தால் அ.தி.மு.க. கட்டாயம் வெற்றி பெறும்.

ஜெயலலிதாவின் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் நகர கூட்டுறவு வங்கி தலைவர் வடிவேல் முருகன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் முத்தையா, குப்புசாமி, மாவட்ட துணைச் செயலாளர் பாதுஷா, பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், சிறுபான்மை பிரிவு மாவட்ட பொருளாளர் அப்துல் மாலிக், வீட்டு வசதி சங்க தலைவர்கள் திசைநாதன், திலகர், நகர் செயலாளர் கணேசன், துணை செயலாளர் ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்க தலைவர் வீரக்குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுரேஷ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் செந்தில்குமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் கார்மேகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலாண்மை இயக்குனர் சிவக்குமார் நன்றி கூறினார்.

இதேபோல கீழக்கரையில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் மணிகண்டன் தலைமை தாங்கி ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் சென்று நேரடியாக பொருட்களை வழங்கினார். கலெக்டர் வீரராகவ ராவ் முன்னிலை வகித்தார். இதில் அ.தி.மு.க.நகர் செயலாளர் ராஜேந்திரன், அ.தி.மு.க. நிர்வாகிகள் செல்வகணேஷ் பிரபு, நாராயணன், குமரன், எம்.ஜி.ஆர். மன்றம் பாரூக், சிறுபான்மை பிரிவு நகர் செயலாளர் சேக் நூர்தீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்