வில்லியனூர் பைபாஸ் சாலையில் விபத்தில் சிக்கி புதுமாப்பிள்ளை சாவு

வில்லியனூர் பைபாஸ் சாலையில் பன்றிகள் குறுக்கே பாய்ந்ததால் திடீர் பிரேக் போட்ட போது மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-01-06 21:30 GMT

வில்லியனூர்,

விழுப்புரம் மாவட்டம் நல்லரசன்பேட்டை அமர் நகரை சேர்ந்தவர் முகமது சபீர்கான். இருவடைய மகன் அப்துல் ரகுமான்கான் (வயது 26). இவர் புதுவை ரெட்டியார்பாளையத்தில் உள்ள பர்னிச்சர் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு வருகிற 20–ந்தேதி திருமணம் நடைபெறுதாக இருந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து அப்துல் ரகுமான்கான் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். வில்லியனூர் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது சாலையின் குறுக்கே திடீரென்று பன்றிகள் கூட்டமாக வந்தன. இதைப்பார்த்ததும் மோட்டார் சைக்கிளை திடீர் பிரேக் போட்டு அப்துல் ரகுமான்கான் நிறுத்த முயன்றார்.

அப்போது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து அவர் கீழே விழுந்தார். இதில் அப்துல்ரகுமான்கானுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்து வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அப்துல் ரகுமான்கான் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் புனிதராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 15 நாட்களில் திருமணம் நடைபெற இருந்தநிலையில் விபத்தில் சிக்கி பலியான புதுமாப்பிள்ளையின் உடலைப்பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்