மோட்டார் சைக்கிள்கள் மோதல்: பள்ளிக்கூட மாணவர் சாவு வாலிபர் படுகாயம்
தூத்துக்குடி அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் பள்ளிக்கூட மாணவர் பரிதாபமாக இறந்தார்.
ஸ்பிக்நகர்,
தூத்துக்குடி அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் பள்ளிக்கூட மாணவர் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த வாலிபருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பள்ளிக்கூட மாணவர்
தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு நேசமணி நகரை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் இசக்கிமுத்து(வயது 19). இவர் பழைய காயலில் உள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர் நேற்று மதியம் எம்.சவேரியார்புரத்தில் மோட்டார் சைக்கிளில் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது, எதிரே ராஜீவ்நகர் 2-வது தெருவை சேர்ந்த பாரத்(20) என்பவரும் மோட்டார் சைக்கிளில் ரோட்டை கடக்க முயன்றார்.
பரிதாப சாவு
அப்போது எதிர்பாராத விதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் மோட்டார் சைக்கிள்களில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் ரோட்டில் கிடந்த அந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இசக்கிமுத்து நேற்று மாலை பரிதாபமாக இறந்தார். பாரத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.