திருப்பூரில் பெண் குளிப்பதை எட்டிப்பார்த்தவருக்கு 2 ஆண்டு சிறை
திருப்பூரில், பெண் குளிப்பதை எட்டிப்பார்த்தவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வீரபாண்டி,
திருப்பூர் செட்டிபாளையம் இடுவாய் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 36). பனியன் நிறுவன தொழிலாளி. இவர் கடந்த 2005–ம் ஆண்டு தனது வீட்டின் அருகில் உள்ள குடியிருப்பு வீட்டில் குளியலறையில் பெண் ஒருவர் குளிப்பதை எட்டி பார்த்துள்ளார். இதனை அறிந்து கொண்ட அந்த பெண் கூச்சலிட்டுள்ளார்.
இதையடுத்து அந்த பெண்ணின் உறவினர்கள் செல்வராஜிடம் இதுகுறித்து கேட்டுள்ளனர். மேலும், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதைத்தொடர்ந்து செல்வராஜ் மீது அந்த பெண் திருப்பூர் வீரபாண்டி போலீசில் புகார் தெரிவித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் ஜே.எம்.2 கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் செல்வராஜ் கடந்த 6 மாதங்களாக தலைமறைவாக இருந்துவந்துள்ளார். ஆனால் போலீசார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் செல்வராஜை கைது செய்து, அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கு நேற்று முன்தினம் ஜே.எம்.2 கோர்ட்டில் விசாரணைக்காக வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு பழனி குற்றம் சாட்டப்பட்ட செல்வராஜுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத்தை கட்டத்தவறினால் மேலும் 1 மாதம் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.