ஈரோட்டில் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து ஆண் குழந்தை சாவு; சிறுமிக்கு தீவிர சிகிச்சை
ஈரோட்டில் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து ஆண் குழந்தை பரிதாபமாக இறந்தது. சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஈரோடு,
ஈரோடு சூளை மல்லிகை நகர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ். டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி மாரியம்மாள். இவர்களுடைய குழந்தை கார்த்திக் (வயது 2). யுவராஜின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மனைவி உமா. இவர்களுடைய மகள் ஹரினி (5).
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குழந்தைகள் கார்த்திக்கும், ஹரினியும் வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்குள்ள 3 அடி ஆழம் உள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டிக்குள் இவர்கள் 2 பேரும் தவறி விழுந்து விட்டனர்.
தண்ணீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராட்டிக்கொண்டு இருந்த குழந்தைகளை பார்த்த உமா அதிர்ச்சி அடைந்து, பதறி அடித்து ஓடிவந்து குழந்தைகள் இருவரையும் வெளியே தூக்கினார். அதன்பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, குழந்தைகள் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் கார்த்திக் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஹரினிக்கு தொடர்ந்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து ஆண் குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.