சிறுவயதில் ஆதரவற்று தவித்தபோது தங்களை மீட்ட போலீஸ்காரரை சந்திக்க நியூசிலாந்தில் இருந்து புனே வந்த சகோதரிகள்
சிறுவயதில் ஆதரவற்று தவித்தபோது தங்களை பத்திரமாக மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த போலீஸ்காரரை சந்திக்க நியூசிலாந்தில் இருந்து புனே வந்த சகோதரிகள் பற்றிய உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளது.
புனே,
சிறுவயதில் ஆதரவற்று தவித்தபோது தங்களை பத்திரமாக மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த போலீஸ்காரரை சந்திக்க நியூசிலாந்தில் இருந்து புனே வந்த சகோதரிகள் பற்றிய உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளது.
உருக்கமான சம்பவம்
வழக்கமாக தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும், தங்களை ஈன்றெடுத்த பெற்றோரை பார்த்து விடவேண்டும் என அவர்களது உள்ளம் துடிக்கும். ஆனால் நியூசிலாந்து தம்பதியால் தத்தெடுக்கப்பட்ட சகோதரிகள் 2 பேர் பெற்றோரால் தாங்கள் ஆதரவற்ற நிலையில் சாலையில் விடப்பட்டபோது, தங்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த போலீஸ்காரர் ஒருவரை தேடி புனேக்கு வந்து அலைந்தனர்.
இதுபற்றிய உருக்கமான தகவல்கள் வருமாறு:-
ஆதரவற்று தவித்த சிறுமிகள்
புனே டெக்கான் ஜிம்கானா போலீஸ் நிலையத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் சர்ஜிராவ் காம்பிளே. இவர் 1998-ம் ஆண்டு அந்த போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக இருந்தபோது, அங்குள்ள ஒரு சாலையில் 2 சிறுமிகள் தனியாக தவித்து கொண்டிருந்ததை கண்டார்.
அவர்கள் இருவரையும் பெற்றோர் ஆதரவற்ற நிலையில் தவிக்கவிட்டு சென்றிருந்தது தெரியவந்தது. இதையடுத்து சர்ஜிராவ் காம்பிளே 2 சிறுமிகளையும் மீட்டார்.
தத்தெடுக்கப்பட்டனர்
பின்னர் சிறுமிகள் இருவரையும் ஒப்படைப்பதற்காக அவர்களது பெற்றோரை தேடிஅலைந்தார். ஆனால் அவரது முயற்சி தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து அந்த சிறுமிகளை அவர் புனே சசூன் மருத்துவமனையில் செயல்பட்டு வரும் ‘நண்பர்கள் சமூகம்’ என்ற குழந்தைகள் நல மையத்தில் பத்திரமாக ஒப்படைத்தார்.
அப்போது அக்காள், தங்கையான அந்த சிறுமிகளுக்கு 3 மற்றும் 2 வயது தான். காப்பகத்தில் சீமா மற்றும் ரீமா என்ற பெயரில் இருவரும் வளர்ந்தனர். பின்னர் சிறுமிகள் இருவரும் நியூசிலாந்தின் வெலிங்டன் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியால் தத்தெடுக்கப்பட்டனர்.
தற்போது, 24 வயதாகும் சீமா நியூசிலாந்தில் ஆசிரியையாகவும், ரீமா அங்கு என்ஜினீயராகவும் உள்ளனர்.
போலீஸ்காரரை சந்திக்க...
இந்தநிலையில், சகோதரிகள் இருவரும் தாங்கள் பெற்றோரால் கைவிடப்பட்டு தெருவில் நின்றபோது, தங்களை மீட்டு காப்பகத்தில் சேர்த்த போலீஸ்காரர் சர்ஜிராவ் காம்பிளேயை சந்தித்து தாங்கள் மீட்கப்பட்டது பற்றி தெரிந்து கொள்வதற்காகவும், அவர் பணிபுரிந்த டெக்கான் ஜிம்கானா போலீஸ் நிலையத்தை பார்ப்பதற்காகவும் புனேக்கு தங்களது வளர்ப்பு பெற்றோருடன் வந்து இருந்தனர்.
அவர்கள் ‘நண்பர்கள் சமூகம்’ குழந்தைகள் நல மையத்தின் உதவியுடன் டெக்கான் போலீஸ் நிலையம் சென்று போலீஸ்காரர் சர்ஜிராவ் காம்பிளே பற்றி விசாரித்தனர்.
ஏமாற்றம்
அப்போது, அவர் கடந்த 2007-ம் ஆண்டே ஓய்வுபெற்று சென்றுவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். தற்போது 73 வயது ஆகும் அவர் புனேயில் இல்லை என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து சகோதரிகள் இருவரும் ஏமாற்றத்துடன் நியூசிலாந்து திரும்பினர். விரைவில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரரின் இருப்பிடத்தை அறிந்து தகவல் தெரிவிப்பதாக போலீசார் அந்த சகோதரிகளை வழியனுப்பி வைத்தனர்.
தங்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் காப்பகத்தில் சேர்த்த போலீஸ்காரரை பார்ப்பதற்காக புனே வந்த சகோதரிகள், ஏமாற்றத்துடன் நியூசிலாந்து திரும்பிய சம்பவம் உருக்கமாக அமைந்ததாக டெக்கான் ஜிம்கானா போலீசார் மற்றும் ‘நண்பர்கள் சமூகம்’ குழந்தைகள் நல மைய நிர்வாகிகள் தெரிவித்தனர்.