வாரிய தலைவர்கள் நியமன விவகாரத்தால் கூட்டணி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை தேவேகவுடா பேட்டி

வாரிய தலைவர்கள் நியமன விவகாரத்தால் கூட்டணி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தேவேகவுடா தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-05 22:45 GMT
பெங்களூரு, 

வாரிய தலைவர்கள் நியமன விவகாரத்தால் கூட்டணி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தேவேகவுடா தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் நேற்று ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவர் தேவே கவுடா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து இல்லை

மாநிலத்தில் கூட்டணி ஆட்சியில் எந்த விதமான பிரச்சினையும் இல்லை. வாரிய தலைவர்கள் நியமனத்தில் இரு கட்சிகளின் தலைவர்களிடையே மோதல் ஏற்பட்டு இருப்பதாக செய்திகள் வருகின்றன. ஒரு சில வாரியங்களுக்கு தலைவர்களை நியமிப்பது, வாரியங்களை பிரித்து கொள்வதில் சிறு, சிறு பிரச்சினைகள் எழுவது கூட்டணி ஆட்சியில் சகஜம் தான். இதுபோன்ற பிரச்சினைகளை முதல்-மந்திரி குமாரசாமி, முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் ஆகியோர் பேசி தீர்த்து கொள்வார்கள்.

வாரிய தலைவர்கள் நியமன விவகாரத்தால் கூட்டணி ஆட்சிக்கு எந்த விதமான ஆபத்தும் இல்லை. 5 ஆண்டுகளையும் கூட்டணி அரசு முழுமையாக நிறைவு செய்யும். மாநில அளவில் கூட்டணி கட்சிகளுக்கு இடையே எழும் பிரச்சினைகளை, இங்குள்ள தலைவர்களே பேசி தீர்த்து கொள்வார்கள்.

தொகுதி பங்கீடு குறித்து...

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்களுடன், நான் தொடர்பில் இருந்து வருகிறேன். நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து கூடிய விரைவில் இரு கட்சிகளின் தலைவர்களும் ஆலோசித்து சுமுகமான முடிவு எடுப்போம். தொகுதிகளை பங்கிட்டு கொள்வதில் எந்த விதமான பிரச்சினையும் எழ வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். முதல்-மந்திரி குமாரசாமி சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். பெங்களூரு நகரின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதே நேரத்தில் மாநிலத்தில் விவசாயிகளுக்காகவும் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சியால் 37 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால், கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் தீவிரமாக பணியாற்றும்படி கூறியுள்ளேன். நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதே தயாராகும்படி தெரிவித்துள்ளேன்.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

மேலும் செய்திகள்