ரூ.25.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: மந்திரி புட்டரங்கஷெட்டியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் எடியூரப்பா பேட்டி

அலுவலக ஊழியரிடம் ரூ.25.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மந்திரி புட்டரங்கஷெட்டியை பதவியில் இருந்து குமாரசாமி நீக்க வேண்டும் என்று எடியூரப்பா கூறினார்.

Update: 2019-01-05 23:00 GMT
சிவமொக்கா, 

அலுவலக ஊழியரிடம் ரூ.25.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மந்திரி புட்டரங்கஷெட்டியை பதவியில் இருந்து குமாரசாமி நீக்க வேண்டும் என்று எடியூரப்பா கூறினார்.

ரூ.25.80 லட்சம் பறிமுதல்

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி அரசில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மந்திரியாக பதவி வகித்து வருபவர் புட்டரங்கஷெட்டி.

இந்த நிலையில் புட்டரங்கஷெட்டியின் அலுவலக ஊழியரான மோகன் என்பவர், விதான சவுதா மேற்கு நுழைவு வாயில் பகுதியில் ஆவணங்கள் இன்றி ரூ.25.80 லட்சத்தை எடுத்து சென்றார். அந்த பணத்தை பறிமுதல் செய்த விதானசவுதா போலீசார், மோகனையும் கைது செய்தனர். அவரிடம் பணம் எங்கிருந்து வந்தது? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ராஜினாமா செய்ய வேண்டும்

இந்த நிலையில் மந்திரியின் அலுவலக ஊழியர் கைதானது தொடர்பாக முன்னாள் முதல்-மந்திரியும், கர்நாடக பா.ஜனதா தலைவருமான எடியூரப்பா நேற்று சிவமொக்காவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உரிய ஆவணங்கள் இன்றி ரூ.25.80 லட்சத்தை எடுத்து சென்றதாக விதான சவுதா வளாகத்தில் வைத்து மந்திரி புட்டரங்கஷெட்டியின் அலுவலக ஊழியரை போலீசார் கைது செய்து உள்ளனர். இதுபற்றி மந்திரி புட்டரங்கஷெட்டியிடம் கேட்டால், அவர் அந்த பணம் ஒப்பந்ததாரர்களுக்கு உரியது என்று கூறுகிறார். அவர் இப்படி கூறுவது வேடிக்கையாக உள்ளது. இந்த விவகாரத்திற்கு முழு பொறுப்பு ஏற்று புட்டரங்கஷெட்டி மந்திரி பதவியை ராஜினாமா செய்யவேண்டும். அவர் பதவியை ராஜினாமா செய்யாவிட்டால், அவரை மந்திரி பதவியில் இருந்து முதல்-மந்திரி குமாரசாமி நீக்க வேண்டும்.

ரபேல் போர் விமானம்

சிகாரிபுரா தாலுகா சிக்கவல்லத்தி கிராமத்தில் விவசாயி ஒருவர் ஆழ்துளை கிணறு தோண்டியதற்காக, வனத்துறை அதிகாரி தர்ஷன் என்பவர் லஞ்சம் பெற்று உள்ளதாக எனக்கு தகவல் கிடைத்து உள்ளது. அந்த அதிகாரியை மாநில அரசு பணியில் இருந்து நீக்க வேண்டும்.

ரபேல் போர் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்து இருப்பதாகவும், இதில் பிரதமர் மோடிக்கும், ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனுக்கும் தொடர்பு இருப்பதாகவும் முன்னாள் மத்திய மந்திரி வீரப்ப மொய்லி கூறியுள்ளார். அவர் இப்படி கூறி இருப்பது சரியல்ல.

அமித்ஷா வருகை

எங்கள் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா வருகிற 9-ந் தேதி துமகூரு வருகிறார். அங்கு எங்கள் கட்சியின் சார்பில் நடக்கும் பூத் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

இதையடுத்து அவர் சித்தகங்கா மடத்தின் மடாதிபதி சிவக்குமார சுவாமியை சந்தித்து அவரிடம் உடல்நலம் விசாரித்து ஆசி பெறுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து சிவமொக்கா டவுனில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி எடியூரப்பா சாமி தரிசனம் செய்தார்.

மேலும் செய்திகள்