மந்திரியின் உதவியாளரிடம் ரூ.25 லட்சம் பறிமுதல் விசாரணைக்கு குமாரசாமி உத்தரவு
மந்திரியின் அலுவலக உதவியாளரிடம் ரூ.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெங்களூரு விதானசவுதாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு,
பெங்களூரு கப்பன் பார்க் அருகே விதானசவுதா (சட்டசபை) கட்டிடம் உள்ளது.
மந்திரியின் அலுவலக உதவியாளர்
நேற்று முன்தினம் விதானசவுதா மேற்கு நுழைவு வாயில் பகுதியில் காரின் அருகே சந்தேகப்படும் படியாக நின்ற நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவருடைய பெயர் மோகன் என்பதும், அவர் விதானசவுதாவில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மந்திரி புட்டரங்கஷெட்டியின் அலுவலகத்தில் உதவியாளராக பணி செய்வதும் தெரியவந்தது.
மேலும், அவரிடம் இருந்த பையில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.25.80 லட்சம் இருந்தது தெரியவந்தது. அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், விதானசவுதா போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகனை கைது செய்தனர்.
போலீஸ் விசாரணை
பின்னர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் இரவு நடத்தப்பட்ட விசாரணையில் மோகன் முன்னுக்கு பின் முரணாக தகவலை அளித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து மோகன் பணம் பெற்று இருந்தது தெரியவந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, நேற்று போலீசார் மோகனை விதானசவுதாவில் உள்ள மந்திரி புட்டரங்கஷெட்டியின் அலுவலகத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள். மேலும், வழக்கு தொடர்பாக மோகன் பணி செய்து வரும் அலுவலகத்தின் பொறுப்பு அதிகாரிக்கு போலீசார் நோட்டீசு அனுப்பி உள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜினாமா செய்ய வலியுறுத்தல்
இந்த நிலையில், கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா நேற்று சிவமொக்காவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
உரிய ஆவணங்கள் இன்றி ரூ.25.80 லட்சத்தை எடுத்து சென்றதாக விதான சவுதா வளாகத்தில் வைத்து மந்திரி புட்டரங்கஷெட்டியின் அலுவலக ஊழியரை போலீசார் கைது செய்து உள்ளனர். இதுபற்றி மந்திரி புட்டரங்கஷெட்டியிடம் கேட்டால், அவர் அந்த பணம் ஒப்பந்ததாரர் களுக்கு உரியது என்று கூறுகிறார்.
அவர் இப்படி கூறுவது வேடிக்கையாக உள்ளது. இந்த விவகாரத்திற்கு முழு பொறுப்பு ஏற்று புட்டரங்கஷெட்டி மந்திரி பதவியை ராஜினாமா செய்யவேண்டும். அவர் பதவியை ராஜினாமா செய்யாவிட்டால், அவரை மந்திரி பதவியில் இருந்து முதல்-மந்திரி குமாரசாமி நீக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதுபோல் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர் கூறுகையில், ‘கர்நாடக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மந்திரி புட்டரங்கஷெட்டியின் உதவியாளரிடம் இருந்து பணம் சிக்கியுள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் புட்டரங்கஷெட்டி தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’ என்றார்.
விசாரணைக்கு உத்தரவு
இந்த விவகாரம் குறித்து முதல்-மந்திரி குமாரசாமியிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:-
பெங்களூரு விதானசவுதாவில் மந்திரியின் உதவியாளரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது குறித்து உரிய விசாரணை நடத்தும்படி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். விசாரணை அறிக்கை வந்ததும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். என்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி இதுவரை யாரையும் காப்பாற்ற முயன்றதில்லை. அதுபோன்ற செயல்களிலும் ஈடுபடமாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஊழல் தடுப்பு படையிடம் ஒப்படைப்பு
இதற்கிடையே மந்திரியின் உதவியாளரிடம் பணம் சிக்கிய வழக்கு கர்நாடக ஊழல் தடுப்பு படையிடம் ஒப்புடைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெங்களூரு மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனர் தேவராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசு ஊழியரான மோகன் விதான சவுதாவில் உரிய ஆவணங்கள் இன்றி பணம் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.
மோகன் அரசு ஊழியர் என்பதாலும், உரிய ஆவணங்கள் இன்றி பணம் வைத்திருந்ததாலும் இந்த வழக்கு விசாரணை ஊழல் தடுப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து ஊழல் தடுப்புபடையினர் விசாரணை நடத்துவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.